×

10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மறு மதிப்பீடு திட்டம்: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் மறு மதிப்பீடு திட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது வரை 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்தது என்று மாணவர்கள் கருதினால் அவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான திட்டம் அமலில் உள்ளது. ஆனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு கூட்டல் மட்டுமே செய்ய முடியும் என்ற வாய்ப்பு இருந்து வந்தது. அவர்கள் விடைத்தாள் நகல்களை பெறவோ அல்லது மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வழங்கப்பட்டிருக்கிறது என்று கருதி மறு மதிப்பீடு செய்ய விரும்பினாலோ அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு இதுவரை வழங்கப்படாமல் இருந்தது.

இதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், இனி 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கவும், மறு மதிப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 11, 12ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. வரும் பொதுத்தேர்வு முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கு 275 ரூபாய் என்றும் மறு மதிப்பீடு செய்வதற்கு ஒரு பாடத்திற்கு 505 ரூபாய் என்றும் மறு கூட்டல் செய்ய விரும்பினால் 205 ரூபாய் என்றும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மாணவர்கள் நீதிமன்றங்கள் மூலமாகவும், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் மூலமாகவும் விண்ணப்பித்து, அதிகமான மாணவர்கள் விடைத்தாள் நகல்களை பெற்று வந்தனர். மறு மதிப்பீட்டின் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருந்தும் பல மாணவர்களுக்கு கிடைக்காத சூழ்நிலை இருந்ததாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இத்தகைய அறிவிப்பு 10ம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மறு மதிப்பீடு திட்டம்: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Department of School Education ,Chennai ,Government of the School Education Department ,School Education Department ,Dinakaran ,
× RELATED காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு