×

குரோம் வெப் பிரவுசரை கூகுள் விற்க உத்தரவிட வேண்டும்: பெடரல் நீதிபதிக்கு அமெரிக்க அரசு கோரிக்கை

வாஷிங்டன்: கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கூகுள் நிறுவனம் ஏக போக உரிமையை பராமரித்து வந்ததை நீதிமன்றம் கண்டறிந்ததையடுத்து அதன் மேலாதிக்க போட்டியை தடுக்க குரோம் பிரவுசரை விற்க உத்தரவிட வேண்டும் என்று பெடரல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு தேடுபொறி நிறுவனமான கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 10 ஆண்டுக்கும் மேலாக ஏக போக உரிமையை பராமரித்து வருகிறது.

கூகுளின் குரோம், ஆண்ட்ராய்ட் செல்போன்களில் தேடும் தளமாக இருக்கிறது. பயனீட்டாளர் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லாமல் தானாகவே குரோம் தேடுதளமாக இருக்கிறது. இது தொடர்பான வழக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக தேடு பொறி சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மாவட்ட நீதிபதி அமித் மேத்தா தீர்ப்பளித்திருந்தார். இந்த வழக்கில் கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என அமெரிக்க நீதித்துறை அறிவுறுத்தி உள்ளது.

செல்போன் இயங்கு தளங்களில் கூகுள் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பான ஒப்பந்தங்களை கூகுள் ரத்துச்செய்யவேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது. நிறுவனம் செல்போன் இயங்குதளத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது தடுக்கப்படாவிட்டால், ஆண்ட்ராய்ட் தளத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். கூகுள் அடுத்த மாதம் தனது தரப்பு வாதத்தையும் பரிந்துரைகளையும் நீதிமன்றம் முன்வைக்கும்.

அதன் பிறகு ஏப்ரல் மாதம் நடைபெறும் வழக்கு விசாரணையில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் இருதரப்பும் வாதாடவிருக்கின்றன. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு பதவி ஏற்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் மோசடிகளை விசாரிக்கும் குழுவை மாற்றினால் நிலைமை மாறலாம் என கூறப்படுகிறது. வரும் மே மாதத்திற்குள் வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்குவதற்கு நீதிபதி திட்டமிட்டுள்ளார். அரசாங்க பரிந்துரைகளை அவர் ஏற்று கொண்டால் கூகுள் தன்னுடைய 16 வருட குரோம் பிரவுசரை விற்க வேண்டிய நிலை உருவாகும்.

The post குரோம் வெப் பிரவுசரை கூகுள் விற்க உத்தரவிட வேண்டும்: பெடரல் நீதிபதிக்கு அமெரிக்க அரசு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Google ,US government ,Washington ,Dinakaran ,
× RELATED நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியா?