×

சித்தூரில் உள்ள திருத்தணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

*அதிகாரிகள் அதிரடி

சித்தூர் : சித்தூர் பகுதியில் உள்ள திருத்தணி பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது இந்த காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு, சாலையோர கடைகளால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார் மற்றும் பொதுமக்கள் செல்ல வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், மாநகராட்சி ஆணையர் மோகன் பிரசாத் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி திட்ட அதிகாரி நாகேந்திராவுக்கு உத்தரவு பிறப்பித்தார. அதன்படி, மாநகராட்சி திட்ட அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி லோகேஷ் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை திருத்தணி பேருந்து நிலையத்திற்கு சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி திட்ட அதிகாரி கூறியதாவது: திருத்தணி பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் மார்க்கெட் அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து திருத்தணி பேருந்து நிலையத்தில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் காய்கறி விற்பனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இனி யாராவது போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்யாதவாறு உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி லோகேஷ் மற்றும் ஏராளமான மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post சித்தூரில் உள்ள திருத்தணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Thiruthani bus station ,Chittoor ,Dinakaran ,
× RELATED குடிபாலா- எம்எஸ்ஆர் சர்க்கிள் வரை...