×

செட்டிகுளம் முருகன் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா கோலாகலம்: வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் தரிசனம்

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழா இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பக்தர்களால் பெருமையோடு வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாதந்தோறும் நடக்கும் கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று புரட்டாசி  மாத கிருத்திகை விழாவையொட்டி மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவரை பக்தர்கள் தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கோயில் வெளிப்பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மயில் வாகனத்தில் வீதி உலா நடந்தது.

இதையடுத்து அரோகரா, அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் மலைக்கோயிலை சுற்றி வெள்ளித் தேர் இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.​ கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கிருத்திகை விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மாவிலிங்கை, இரூர், பாடாலூர், ஆலத்தூர்கேட் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post செட்டிகுளம் முருகன் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா கோலாகலம்: வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : PURATASI KRUTIKAI FESTIVAL ,SETIKULAM MURUGAN TEMPLE ,KOLAGALAM ,BATALUR ,PURATASI MONTH KRUTIKAI FESTIVAL ,ALATHUR TALUGA SETIKULAM DANDAYUDAPHANI TEMPLE ,Dandayudapani ,Swami ,Temple ,Vadpalani ,Alathur Taluga Settikulam ,Perambalur district ,Krishna festival ,Puratasi Krishna Festival ,
× RELATED திமுக அரசு பொறுப்பேற்ற பின் 2000வது...