×
Saravana Stores

நிர்வாக நலன் கருதி சென்னை மண்டலத்தில் உள்ள சார்பதிவாளர்கள் டெபுடேஷன் முறையில் டிரான்ஸ்பர்: வணிகவரி துறை செயலாளர் அறிவிப்பு

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2023ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் பதிவுத்துறையில் சென்னை மண்டலத்தில் பணியாற்றி வந்த அனைத்து சார்பதிவாளர்களும் மாற்றப்பட்டு புதிதாக சார்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டனர். பல வருடங்களாக தொடர்ந்து சென்னையிலேயே பல சார்பதிவாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் பல்வேறு புகார்களும் தொடர்ந்து பெறப்பட்டு வந்தன. எனவே, நிர்வாக நலன் கருதி சென்னை மண்டலத்தின் அனைத்து சார்பதிவாளர்களும் முழுமையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். எந்தவித இடையூறோ வெளி அழுத்தமோ இன்றி வெளிப்படையான முறையில் பொதுமக்கள் நலன் மற்றும் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு அனைத்து சார்பதிவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

சென்னை மண்டலத்தில் குறிப்பிட்ட 23 இடங்கள் டெபுடேஷன் மூலம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என்பது போன்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது முற்றிலும் தவறான கருத்தாகும். இதற்கென ஒரு நிர்வாக காரணம் தனியே உள்ளது. சென்னையில் உள்ள 20 சார்பதிவாளர் அலுவலகங்களில் மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே சார்பதிவாளர்களாக பணியாற்ற ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள 54 பதிவு மாவட்டங்களில் மாவட்ட பதிவாளர் நிர்வாகம், மற்றொன்று மாவட்ட பதிவாளர் தணிக்கை.

பதிவுத்துறையில் மறுசீரமைப்பு பணியின் தொடர்ச்சியாக சமீபத்தில் புதிதாக 5 பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் அனைத்து பதிவு மாவட்டங்களிலும் இந்த மாவட்ட பதிவாளர் நிர்வாகம் மற்றும் தணிக்கை பணியிடங்களை நிரப்ப வேண்டி இருந்தது. ஒரு பக்கம் இவ்விரண்டு பணியிடங்களும் பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருந்த நிலையில் மாவட்ட பதிவாளர் நிலையில் சென்னையில் 20 இடங்களில் மாவட்ட பதிவாளர்களே சார்பதிவாளர்களாக பதிவு பணியை மேற்கொண்டு வந்தனர். எனவே தேவையை கருதி இந்த மாவட்ட பதிவாளர்களை பதிவு மாவட்டங்களுக்கு நிர்வாகம் மற்றும் தணிக்கை பணிக்காக அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. புதிதாக மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் உருவாக்கப்படாத நிலையில் நிர்வாக நலனிற்காக இந்த மாற்றத்தை செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் மாவட்ட பதிவாளர் நிலையில் பதிவு பணியை மேற்கொண்டிருந்த சார்பதிவாளர்களை மாற்றி அந்த இடத்தில் சார்பதிவாளர் நிலையில் உள்ள பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து நிரப்பும் பொழுது அந்த பணியிடம் சார்பதிவாளர் நிலைக்கு தரம் இறக்கப்படும். இவ்வாறு 20 இடங்களில் சார்பதிவாளர்களை அவ்விடங்களுக்கு பணியிட மாற்றம் செய்திருந்தால் அந்த 20 மாவட்ட பதிவாளர் பணியிடங்களும் தரம் இறக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கும். இதனால் பணி மூப்பு பட்டியலில் இளையவர்களாக இருக்கும் 20 மாவட்ட பதிவாளர்கள் பணியிறக்கம் செய்யப்படும் நிலையை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

எனவே இதனைத் தவிர்க்கும் நோக்கில்தான் இந்த 20 இடங்களிலும் பணியமர்த்தப்பட்ட சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படாது பகராண்மையில் மாற்றம் செய்யப்பட்டார்கள். இதன் காரணமாக 20 மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் பதவி இறக்கம் செய்யப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் கூடுதலாக பெறப்பட்டு இதற்கு தீர்வு காணப்படலாம். மேலும் சாலவாக்கம் மற்றும் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் நிரந்தர பணியிடம் இன்னமும் தோற்றுவிக்கப்படாததால் இவ்விரு இடங்களும் பகராண்மையில் நிரப்பப்பட்டுள்ளன. திருவண்ணாமலை எண் 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளவர் ஏற்கெனவே பகராண்மையில் பணியில் இருந்ததால் பகராண்மையிலேயே தற்போதும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

The post நிர்வாக நலன் கருதி சென்னை மண்டலத்தில் உள்ள சார்பதிவாளர்கள் டெபுடேஷன் முறையில் டிரான்ஸ்பர்: வணிகவரி துறை செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai zone ,Commercial Tax Department ,Chennai ,Commercial Tax ,Jyoti Nirmala ,Dinakaran ,
× RELATED வணிகவரித்துறையில் கூடுதல் வருவாய்...