×

சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கையால் ஏப்ரலில் ரூ.375 கோடி சொத்து வரி வசூல்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.375 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி திகழ்கிறது. இதில், முக்கிய வருவாய் இனமாக சொத்து வரி இருக்கிறது. மாநகரில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதம்தோறும் ஊதியம், ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சொத்து வரி வருவாய் முக்கியமானதாக உள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மேலும் பல திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் அதேநேரம், வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய் இருந்தால் திட்ட பணிகளை வேகமாக முடிக்க முடியும் என்பதால் இதில் அதிக கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, வரி பாக்கியை முறையாக செலுத்தாமல் இருக்கும் நபர்களிடம் இருந்து, வரியை வசூலிக்கும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. பெருந்தொகையை செலுத்தாமல் வரி பாக்கி வைத்துள்ளவர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அந்தந்த முதல் அரையாண்டின் வரியை ஏப்ரல் 15ம் தேதிக்குள்ளும், 2ம் அரையாண்டின் வரியை அக்டோபர் 15க்குள்ளும் முழுமையாக வசூலிக்க வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ஒவ்வொரு அரையாண்டுக்கும் தலா ரூ.750 கோடி வீதம் ரூ.1,500 கோடி வரை வசூலிக்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அல்லது ரூ.5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அவகாசம் அளிக்கப்பட்ட நாட்களுக்கு பின் சொத்து வரி செலுத்துவோருக்கு, 2 சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதுவரை சொத்து வரி கட்டாதவர்களிடம் இருந்து வரி வசூலிக்க செல்போனில் மெசேஜ் அனுப்பி வருவதுடன், மாநகராட்சி அலுவலகர்களை கொண்டு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. 2023-24ம் நிதியாண்டின் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தாதவர்களின் வசதிக்காக, ஏப்ரல் 15ம் தேதி வரை காலக்கெடு என்பதை 15 நாட்கள் நீட்டித்து, ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 30ம் தேதி வரை வரி செலுத்துபவர்களுக்கும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.

இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் (ஏப்ரல்) மட்டும் ரூ.375 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஊக்கத் தொகையாக ரூ.8 கோடியே 57 லட்சம் வரை சொத்து உரிமையாளர்களுக்கு சலுகையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சென்னையில் வீட்டு வரி செலுத்த வேண்டியவர்கள் பெரும்பாலும் சரியாக செலுத்தி விடுகிறார்கள். ஆனால் பெரிய நிறுவனங்கள் சொத்து வரியை செலுத்தாமலே காலம் தாழ்த்தி வருவதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு பல லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அதன் சொத்துக்களை ஜப்தி செய்யப்படும்,’’ என்றார்.

* கடனுக்கு வட்டி ரூ.148.82 கோடி
சென்னை மாநகராட்சியின் தற்போதைய நிதி பற்றாக்குறை ரூ.3,441 கோடி இருப்பதால், நிதி நெருக்கடிகளை குறைக்க, வருவாய் அம்சங்களான தொழில் மற்றும் சொத்து வரி வசூலிப்பில் தொடர் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போதைய கடன் தொகை ரூ.2,573.54 கோடியாகவும், கடந்த நிதியாண்டான 2022-23ல் ரூ.2,591 கோடியாகவும், 2021-22ம் நிதியாண்டில் ரூ.2,715 கோடியாகவும் இருந்தது. தற்போது ரூ.2,574 கோடியாகவும், கடனுக்கு ரூ.148.82 கோடி வரை வட்டிச் செலவினங்கள் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

* வருவாய் இழப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள், கடைகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், திரையரங்கு, தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை தற்போது வரை செலுத்தப்படவில்லை. அதற்கு மாறாக, நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்து சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்து விடுகின்றனர். இதனால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

* ஜப்தி செய்யப்படும்
சொத்து வரி செலுத்தாதோர் குறித்த பட்டியலை, சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டு வந்தது. தொடர்ந்து, ரூ.10 லட்சத்திற்கும் மேல் சொத்து வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள், கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைப்பது, பிறகு நோட்டீஸ் வழங்கி, சொத்துக்களை ஜப்தி செய்வது என நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* ஆன்லைனில் செலுத்த வசதி
சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலங்களில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம், BBPS மற்றும் NEFT மற்றும் RTGS ஆகியவற்றின் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கையால் ஏப்ரலில் ரூ.375 கோடி சொத்து வரி வசூல்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,
× RELATED சென்னை மாநகராட்சியில் பணிபுரியும்...