×

சென்னையில் நடந்த காங்கிரஸ் விழாவில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்பு: தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு

சென்னை: சென்னையில் நேற்று நடந்த காங்கிரஸ் விழாவில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார். இதனால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் மூத்த தலைவர் சி.கே.பெருமாளின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பற்றிய நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சபாநாயகர் அப்பாவு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, ‘‘தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷை பார்த்து தம்பி என கூப்பிடலாமா என இரு முறை கேட்டார். இல்லை என்றால், வேறு ஏதாவது போட்டுவிட போகிறார்கள்’’ என்றார். இதனால், விழாவில் சிரிப்பொலி எழுந்தது. தொடர்ந்து பேசிய தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், ‘‘இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள். விஜயகாந்த் குடும்பம் காங்கிரஸ் பின்னணியில் இருந்து தான் வந்தது.

எங்கள் கட்சி உருவான போது காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க வேண்டும் என சி.கே.பெருமாள் விரும்பினர். 9 நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என கூட்டணி எல்லாம் பேசப்பட்டது. அப்போது, அந்த கூட்டணி அமையவில்லை. முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்த் மீது தனி அன்பு கொண்டவர். அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட அடிக்கடி வீட்டில் வந்து உரிமையோடு பார்த்து செல்வார். காங்கிரஸ் மீது எப்போதும் ஒரு தனிப்பிரியம் உண்டு.

நான் இதற்கு மேல் பேசினால் அது அரசியல் ஆகிவிடும்’’என்றார். காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், “நண்பர்கள் என்ற அடிப்படையில் தான் நூல் வெளியீட்டு விழாவில் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார். அதற்கும் கூட்டணிக்கோ, கட்சிக்கோ எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

The post சென்னையில் நடந்த காங்கிரஸ் விழாவில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்பு: தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : DMDK Treasurer ,L.K. Sutheesh ,Congress ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Congress ,C.K. Perumal ,Chennai… ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...