×

சென்னை, நீலகிரிக்கு 2 நாள் பயணமாக 8ம் தேதி வருகை எடப்பாடி, அண்ணாமலை பிரச்னைக்கு மோடி பஞ்சாயத்து: 2 பேரும் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வரும் 8, 9ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் முழு சுற்றுப்பயண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியானது. கூட்டணி பிரச்னை தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பழைய விமானநிலையத்தில் வரும் 8ம் தேதி மதியம் 2.45 மணிக்கு, தெலங்கானா மாநிலத்தில் உள்ள பேகம்பட் விமானநிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் பிரதமர் மோடி வந்திறங்குகிறார்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 2.55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்துக்கு வருகிறார். மாலை 3 மணியிலிருந்து 3.15 மணி வரை பார்வையிட்டு திறந்து வைக்கிறார். மாலை 3.20 மணிக்கு காரில் புறப்பட்டு, மாலை 3.25 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 3.30 மணியளவில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.50 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையார் சென்றடைகிறார். அங்கிருந்து மாலை 3.55 மணிக்கு காரில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலை 4 மணிக்கு செல்கிறார்.

அங்கு மாலை 4 முதல் 4.20 மணிவரை நடைபெறும் விழாவில் சென்னை- கோவை இடையே வந்தேபாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். 4.25 மணிக்கு காரில் புறப்பட்டு, 4.40 மணியளவில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்துக்கு வருகிறார். அங்கு மாலை 4.45 முதல் 5.45 மணிவரை நடைபெறும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாலை 5.55 மணியளவில் சென்னை ஐஎன்எஸ் அடையார் வந்து சேரும் பிரதமர் அங்கிருந்து மாலை 6 மணியளவில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 6.20 மணியளவில் பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து காரில் பல்லாவரம், அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்துக்கு வருகிறார். அங்கு மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை நடைபெறும் விழாவில், பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, நிறைவு பெற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறார். அங்கிருந்து இரவு 7.40 மணியளவில் பழைய விமான நிலையத்துக்கு காரில் வருகிறார். இரவு 7.45 மணியளவில் இந்திய விமானப் படையின் தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு மைசூர் விமானநிலையம் சென்றடைகிறார். மறுநாள் (9ம் தேதி) காலை தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி வருகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றபின் காலை 9.45 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.20 மணிக்கு, கர்நாடக மாநிலம் மைசூர் யுனிவர்சிட்டி ஹெலிபேட் தளத்தில் சென்று இறங்குகிறார். சென்னை வரும் மோடியை சென்னை விமானநிலையத்தில் வரவேற்கவும், அவரை தனியாக சந்தித்துப் பேசவும், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரம் கேட்டுள்ளனர். எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும் கூட்டணி தொடர்பாக மோதல் எழுந்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி பாஜ தலைமையில் இருக்க வேண்டும். அதிமுக வேண்டாம் என்று அண்ணாமலை கூறுகிறார்.

ஆனால், அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று எடப்பாடி கூறி வருகிறார். இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் எழுந்துள்ளது. இதனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோடியிடம் புகார் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இதுவரை அவர்களுக்கு மோடி அலுவலகத்தில் இருந்து நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் வரவேற்க மட்டும் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நேரம் ஒதுக்கினால் இரு தரப்பினரும் புகார் செய்ய திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இருவர் பிரச்னையில் பஞ்சாயத்து செய்துவைக்க மோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post சென்னை, நீலகிரிக்கு 2 நாள் பயணமாக 8ம் தேதி வருகை எடப்பாடி, அண்ணாமலை பிரச்னைக்கு மோடி பஞ்சாயத்து: 2 பேரும் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Nilgiris ,Chennai ,Modi Panchayat ,Annamalai ,Narendra Modi ,Nilgiri district ,
× RELATED நீலகிரியில் பருவ மழை துவக்கம்...