திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். திருவள்ளூர் அடுத்த கிளாம்பாக்கம் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தீனா (16). இவர் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் உள்ள பார்ட்டி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பங்கேற்கச் சென்ற இசைக் குழுவினர்களுடன் தீனாவும் சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி முடிந்து இரவு 11 மணியளவில் மழை பெய்துகொண்டிருந்தபோது இசைக்குழுவினர் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது தீனா சார்ஜரில் போட்டு வைத்திருந்த தனது செல்போனை எடுத்துள்ளார். இதில் திடீரென தீனா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தீனாவை உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தீனா உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி : ஆவடி அடுத்த பட்டாபிராம், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 39 கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் வினோத்ராஜ் (17), பட்டாபிராம், டிரைவர்ஸ் காலனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். நேற்று காலை நீளமான இரும்பு கம்பியை, இரண்டாவது மாடிக்கு எடுத்துச் சென்றபோது, சாலையோர மின்சார வயரில் கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி appeared first on Dinakaran.