×

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது..!!

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. கர்நாடகம் – தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் வறட்சி காலங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. காவிரியில் கர்நாடகா நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கர்நாடகாவில் மழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறி கர்நாடக அரசு நீர்திறப்பதை குறைத்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 6 நாட்களாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக்கும் மேல் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது தண்ணீர் திறப்பு 13 ஆயிரம் கனஅடி என்கிற அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் திறந்துவிடும் கர்நாடாக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கர்நாடகாவில் மழை குறைவு காரணமாக இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற கடினமான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது அரசின் கடமை என துணை முதல்வர் டிகே.சிவகுமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது.

விதான் சவுதாவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். மேகதாது அணை, காவிரி பிரச்னை குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து நீர்திறப்பது குறித்து இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு எடுக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அமர்வில் அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின் போது கர்நாடகம் சார்பில் எந்த மாதிரியான அம்சங்களை எடுத்து வைப்பது என்பது குறித்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

The post காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Party ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 14 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கர்நாடகாவில் கைது