புதுடெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி என்ற வீதம் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு ஒழுங்காற்று குழு நேற்று பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவின் படியும் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு கடந்த 21ம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான இரு மாநிலங்களின் அவசர வழக்குகளை முடித்து வைத்தது. அதன்படி நீர் திறக்க வேண்டும் என்ற காலக்கெடுவானது இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா, செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய் ஆகியோர் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன் மற்றும் திருச்சி மண்டல தலைமை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். அதேப்போன்று கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநில அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வைத்த கோரிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் வறட்சி சூழலில் வினாடிக்கு 12500 கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட கர்நாடகா அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய நீரில் நிலுவையாக இருக்கும் 7டி.எம்.சி தண்ணீரையும் உடனடியாக திறக்க வேண்டும். குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் அதாவது இந்த மாதம் வரையில் மொத்தம் 123.14 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து கர்நாடகா அரசு திறந்திருக்க வேண்டும். ஆனால் 40 டி.எம்.சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அதனால் மீதமுள்ள நீரை உடனடியாக வழங்கிட உத்தரவிட வேண்டும். கர்நாடகா அரசு நீர் விகிதத்தின் அடிப்படையில் பாசனத்தை குறைக்க வேண்டும். மேலும் பற்றாக்குறையின் அளவையும் அம்மாநில அரசு உடனடியாக வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதையடுத்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அரசு அதிகாரிகள்,‘‘மாநிலத்தில் போதிய மழை கிடையாது. குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு பகுதியை பொருத்தமட்டில் சுமார் 53 சதவீதம் மழை பற்றாக்குறையாக தற்போது வரையில் உள்ளது. இதனால் 161 தாலுக்காக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக மாநில அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இதுபோன்ற சூழலில் மாநிலத்தில் இருக்கும் நீர் தேக்க அணைகளில் இருந்து தண்ணீரை பங்களிக்கும் நிலையில் கர்நாடகா இல்லை. இதில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தாலும் கர்நாடகா அரசால் அதனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா பிறப்பித்த உத்தரவில்,‘‘28.09.2023 முதல் 15.10.2023 வரையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 18 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி என்ற வீதம் தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரையானது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு கர்நாடகா அரசுக்கு உத்தரவாக பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
The post காவிரியில் மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டும்: காவிரி ஆணையத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை appeared first on Dinakaran.