×
Saravana Stores

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழ்மொழித்தாளில் 40% மதிப்பெண் பெறவேண்டும் என்ற அரசாணை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில், தமிழ் மொழித் தாளில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, குரூப் 4 தேர்வு விண்ணப்பதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அரசாணை காரணமாக ஆங்கில வழியில் படித்தவர்கள் பாதிக்கப்படுவர்.

ஏற்கனவே தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கும் போது, தற்போதைய அரசாணை மூலம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நூறு சதவீத இடஒதுக்கீடு வழங்குவது போலாகி விடும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு தமிழக அரசு தரப்பில், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

The post டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழ்மொழித்தாளில் 40% மதிப்பெண் பெறவேண்டும் என்ற அரசாணை எதிர்த்த வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,ICourt ,CHENNAI ,Madras High Court ,Tamil Nadu government ,Civil Service Commission ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தகவல்களை டெலிகிராம் சேனலிலும் அறியலாம்