×

அஜாக்கிரதையாக தண்டவாளத்தை கடக்க முயற்சி திருப்பூரில் 6 மாதத்தில் 61 பேர் பலி

*7 பேர் தற்கொலை

திருப்பூர் : திருப்பூர் தண்டவாளத்தை அஜாக்கிரதையாக கடப்பதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. திருப்பூர் மாநகரில் மட்டும் கடந்த ஆறு மாதத்தில் 61 பலியாகி உள்ளனர் ஏழு பேர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.பொதுமக்களின் பயணத்திற்கு சாலை மார்க்கத்திற்கு அடுத்த படியாக பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தக் கூடியது ரயில் பயணம்.இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கூட ரயில்வே நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியாதது ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வது.

இதன் காரணமாக நாடு முழுவதும் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.நேர விரயத்தை தவிர்ப்பதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முற்படுபவர்கள், தண்டவாளத்தின் அருகாமையில் அமர்ந்து மது அருந்துவது மற்றும் மது போதையில் அங்கேயே உறங்குவது, இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே செல்வது உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட திருப்பூரில் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகாமையில் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது.வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் அதிக அளவில் இருக்கக்கூடிய திருப்பூர் மாநகரில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ஆபத்தை உணராமல் ஏராளமான பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.குறிப்பாக திருப்பூர் மாநகரில் ஊத்துக்குளி சாலையில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட், கொங்கு மெயின் ரோடு,பாளையக்காடு,வஞ்சிபாளையம்,தெற்கு தோட்டம்,கூலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் நேற்றைய தினம் வரை 61 பேர் ரயில் தண்டவாளத்தை கடக்க மேற்பட்ட போது பலியாகி உள்ளனர்.அதன்படி மார்ச் மாதம் 11 பேர்,ஏப்ரல் மாதம் 10 பேர், மே மாதம் 8 பேர்,ஜூன் மாதம் 7 பேர் , ஜூலை மாதம் 8 பேர்,ஆகஸ்ட் 12 பேர் என செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து 5 பேர் என 61 பேர் உயிரிழந்தனர். இதே போல் கடந்த 6 மாதத்தில் 7 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து அல்லது நின்று பயணம் செய்யும்போது தவறி விழுந்து உயிரிழப்பவர்களும் உள்ளனர்.ரயில் பயணத்தின் போது பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது கவனம் செலுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே போலீசார் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில்: ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்று உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.அதே நேரத்தில் மது போதையில் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் அருகில் விழுந்து கிடப்பது உள்ளிட்ட காரணங்களாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது. தண்டவாளங்களுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் நேர விரயத்தை தவிர்ப்பதாக ரயில்வே தண்டவாளங்களை ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனர்.தற்போது ரயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ஆலோசனை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட வருவதாகவும் தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத சடலங்கள்

வெளியூரிலிருந்து வேலைக்காக திருப்பூர் வரும் தொழிலாளர்கள் சிலர் ரயில் மோதி உயிரிழக்கும் போது அவரது அடையாளங்களை காணப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ரயில்வே போலீசார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவரின் படத்தை காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் சுற்றுவட்டார பகுதிகளிலும் விசாரணையும் மேற்கொள்கின்றனர்.ஆனால் குறிப்பிட்ட நாள் வரை அடையாளம் காணப்படாத நிலையில் ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்து வருகின்றனர்.

The post அஜாக்கிரதையாக தண்டவாளத்தை கடக்க முயற்சி திருப்பூரில் 6 மாதத்தில் 61 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED சாலை பாதுகாப்புக்காக பள்ளி பகுதிகளில் வேகத்தடைகள் அமைப்பு