- Bumrah
- ரோஹித் சர்மா
- நியூயார்க்
- 9 வது ஐசிசி உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்
- மேற்கிந்திய தீவுகள்
- அமெரிக்கா
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- 19வது லீக் ஆட்டம்
- தின மலர்
நியூயார்க்: 9வது ஐசிசி உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நியூயார்க்கில் நடந்த 19வது லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோஹ்லி ஒரு பவுண்டயுடன் நசீம் ஷா பந்தில் கேட்ச் ஆனார். ரோகித்சர்மா தனது பங்கிற்கு 13 ரன் எடுத்து ஷாகின்ஷா பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.3வது விக்கெட்டிற்கு ரிஷப் பன்ட்-அக்சர் பட்டேல் 39 ரன் சேர்த்த நிலையில் அக்சர் பட்டேல் 20 ரன்னில் வெளியேற அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7,ஷிபம் துவே 3 ரன்னில் அவுட் ஆகினர். அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 31 பந்தில்,6 பவுண்டரியுடன் 42 ரன் எடுத்து முகமது அமீர் பந்தில் கேட்ச் ஆனார். 19 ஓவரில் இந்தியா 119 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் பவுலிங்கில் நசீம்ஷா , ஹரிஸ் ரவூப் 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 13, முகமது ரிஸ்வான் 31 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆகினர். உஸ்மான்கான் , ஃபகார் ஜமான் தலா 13 ரன்னில் அவுட் ஆகினர். கடைசி 2 ஓவரில் 21 ரன் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 5 விக்கெட் இருந்ததால் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் 19 ஓவரில் பும்ரா 3 ரன் மட்டுமே கொடுத்து கடைசி பந்தில் இப்திகார் அகமது (5ரன்) விக்கெட்டை சாய்த்தார். கடைசி ஓவரில் 18 ரன் எடுக்கவேண்டிய நிலையில், அர்ஷ்தீப் சிங் முதல் பந்தில் இமாத் வாசிம் (15ரன்) விக்கெட்டை எடுத்தார். அடுத்த 2 பந்துகளில் தலா ஒருரன் எடுத்த நிலையில், 4 மற்றும் 5வது பந்தில் நசீம் ஷா பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒருரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 113 ரன்மட்டுமே பாகிஸ்தான் எடுத்ததால்6ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
4 ஓவரில் 14 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்த பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். பாண்டியா 2, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்வீழ்த்தினர். முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா 2வது வெற்றியுடன் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை வலுப்படுத்திக்கொண்டது. பாகிஸ்தான் முதல் போட்டியில் அமெரிக்காவிடம் தோற்ற நிலையில் நேற்று 2வது தோல்வியால் அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகி உள்ளது. வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: “நாங்கள் போதுமான அளவு பேட்டிங் செய்யவில்லை. முதல் 10 ஓவர்களில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் அதற்கு மேல் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்காததால் வீழ்ந்தோம். இப்படிப்பட்ட ஆடுகளத்தில் ஒவ்வொரு ரன்னும் எவ்வளவு முக்கியம் என்று நாங்கள் பேசினோம். கடந்த ஆட்டங்களுடன் ஒப்பிடும்போது இங்கு இந்த முறை நல்ல ஆடுகளமாகவே இருந்தது.
இப்படிப்பட்ட அருமையான பவுலிங் யூனிட் உடன் வேலை செய்யும்போது நம்பிக்கையாக உணர்கிறீர்கள். பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்போது, நான் அனைவரையும் கூப்பிட்டு, அவர்களால் நம்மை இவ்வளவு ரன்களுக்குள் மடக்க முடியும் என்றால், நம்மாலும் அப்படி செய்ய முடியும் என்று கூறினேன். அனைவரின் சிறிய பங்களிப்பும் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். பும்ரா வலிமையிலிருந்து மேலும் வலிமைக்கு செல்கிறார். அவர் ஒரு மேதை. அவர் குறித்து நான் அதிகம் பேசப்போவது கிடையாது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர் இதே மனநிலையில் இருக்க வேண்டும். ரசிகர்கள்கூட்டம் மிக அருமையாக இருந்தது. அவர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் செல்வார்கள் என்று நினைக்கிறேன். மேலும் இது ஆரம்பம்தான் நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது” என்றார்.
The post பும்ரா ஒரு மேதை..அவரை பற்றி அதிகம் பேசப்போவதில்லை: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.