×

அண்ணன் கொலையால் வேதனை தம்பி தூக்கு போட்டு தற்கொலை: கொலையாளியின் தந்தையும் சாவு

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே அண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருமகனை போலீசார் தேடி வரும் நிலையில் மனவேதனையில் இருந்த கொலையானவரின் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி மொள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (75). கடந்த 14ம் தேதி தோட்டத்திற்கு சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது மகன் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராயக்கோட்டை அருகே உள்ளுக்குறுக்கை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் மாரியப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், மாரியப்பனை மொள்ளம்பட்டியை சேர்ந்த அவரது தம்பி சின்னராஜ் (70) என்பவரின் மருமகன் மணி (35) சொத்து தகராறில் கடத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள மணியை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த நிலையில், மருமகன் தனது அண்ணனை கொலை செய்து விட்டதால் சின்னராஜ் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சின்னராஜ் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது அவர் வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுபற்றி ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தனது அண்ணனை மருமகன் கொலை செய்து விட்ட மனவேதனையில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மணியின் தந்தை வெங்கட்ராமன், கொலை வழக்கில் தனது மகனுக்கு தொடர்பு இருப்பதால் அந்த மனவேதனையில் கடந்த 19ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது மணியின் மாமனாரும் தற்கொலை செய்துள்ள சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post அண்ணன் கொலையால் வேதனை தம்பி தூக்கு போட்டு தற்கொலை: கொலையாளியின் தந்தையும் சாவு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Rayakottai ,
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது