×

ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரம் பதிவுத்துறை உதவி செயற்பொறியாளர் வீடுகளில் ரூ.8.82 லட்சம் பறிமுதல்: சொத்து விவரம், வங்கி கணக்குகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை

சென்னை: கிரய ஆவணங்களுக்கு அனுமதி அளிக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பதிவுத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.8.82 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சென்னை பாரிமுனையில் உள்ள குறளக வளாகத்தின் முதல் மாடியில் பதிவு துறை ஐஜி அலுவலகம் இயங்குகிறது. இங்கு அயல்பணியாக உதவி செயற்பொறியாளர் ரமேஷ் பணியாற்றி வருகிறார். அவருக்கு உதவியாக இளநிலை உதவியாளராக விஜயகுமார் என்பவர் உள்ளார். உதவி செயற்பொறியாளர் ரமேஷ் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகளை ஆய்வு செய்து அதற்கு அனுமதி வழங்குவார்.

அதன்படி கூடுவாஞ்சேரி, சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து மேல் நடவடிக்கைக்காக குறளகம் வளாகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு களப்பணி ஆய்வுக்கு 11 கிரய ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களின் களப்பணி ஆய்வின் அனுமதி குறித்து உதவி செயற்பொறியாளர் ரமேஷ், இளம் நிலை உதவியாளர் விஜயகுமார் புகார் தாரரை அணுகியுள்ளனர். அப்போது, 10 ஆவணங்களுக்கு அனுமதி அளிக்க ஒரு ஆவணத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். பின்னர் நடத்திய பேரத்திற்கு பிறகு ஒரு ஆவணத்திற்கு ரூ.2500 என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 10 ஆவணங்களுக்கு ரூ.25 ஆயிரம் பணத்தை புகார் தாரரிடம் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் இளம் உதவியாளர் விஜயகுமார் ஆகியோர் கேட்டுள்ளனர்.புகார்தாரர் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் பணத்தை கொடுத்து லஞ்ச கேட்ட உதவிசெயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் இளநிலை உதவியாளர் விஜயகுமாரிடம் கொடுக்கும்படி கூறினார். அதன்படி புகார் தாரதர் குறளகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 10 ஆவணங்களுக்கு அனுமதி வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் பணம் கொடுக்கும் போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக ரமேஷ் மற்றும் விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் இருவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 8,64,500 ரொக்கம் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் இளநிலை உதவியாளர் விஜயகுமார் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரின் வங்கி கணக்குகள் விவரங்கள் பெற்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இருவரின் பணி காலத்திற்கு முன்பு இருந்த சொத்துகள் விவரங்களை மற்றும் தற்போது உள்ள சொத்துகள் குறித்து முழு விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கெடுத்து விசாரித்து வருகின்றனர்.

The post ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரம் பதிவுத்துறை உதவி செயற்பொறியாளர் வீடுகளில் ரூ.8.82 லட்சம் பறிமுதல்: சொத்து விவரம், வங்கி கணக்குகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Assistant Executive Engineer ,Registration ,Department ,Chennai ,Registration Department ,Dinakaran ,
× RELATED கிறிஸ்தவ தேவாலய சொத்துக்களை...