×

லஞ்ச பணத்துடன் சொந்த ஊருக்கு சென்றபோது ஊட்டி நகராட்சி ஆணையர் காரில் ரூ.11.70 லட்சம் பறிமுதல்: 13 மணி நேரம் விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா. இவர், கட்டிடங்கள் புனரமைப்பதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து தனியார் வாடகை காரில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஊட்டி-கோத்தகிரி சாலையில் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர், சிலரிடம் லஞ்சம் பணம் பெற்று கொண்டு செல்வதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அந்த காரை விரட்டி சென்று தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் மடக்கி சோதனையிட்டனர். அப்போது அதில் கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் இருந்துள்ளது. அந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை ஊட்டி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சுமார் 13 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை தொடர்ந்தது.

பின்னர் அவரது அலுவலக அறையில் இருந்து ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து அவர் மீது ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 7ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், ‘‘ஊட்டியில் அண்மையில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட பிரபல துணிக்கடை கட்டிடம் அனுமதி பெற்ற அளவை விட விதிமுறைகளை மீறி கூடுதலாக கட்டப்பட்டது, கேசினோ சந்திப்பு முதல் சேரிங்கிராஸ் வரை பார்க்கிங் ஏலம் விட்டதில் முறைகேடு நடந்தது.

இது தவிர ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் தொடர்பாக ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா ரூ.10 லட்சம் பெற்றுள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அவர் சென்ற காரை சோதனைசெய்து ரூ.11.70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது’’ என தெரிவித்தனர்.

The post லஞ்ச பணத்துடன் சொந்த ஊருக்கு சென்றபோது ஊட்டி நகராட்சி ஆணையர் காரில் ரூ.11.70 லட்சம் பறிமுதல்: 13 மணி நேரம் விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Ooty Municipal ,Commissioner ,Nilgiri District ,Ooty ,Municipal Commissioner ,Jahangir Pasha ,Dinakaran ,
× RELATED நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்படும்