×

பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியத்தின் பதிப்பு அரசியலமைப்பை அழிக்கவும், இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது: ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் 45 பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணை செயலாளர்கள், 35 இயக்குனர்கள் மற்றும் துணை செயலாளர்கள் என 45 அதிகாரிகள் லேட்ரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பொதுவாக இத்தகைய பதவிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் மற்றும் குரூப் “ஏ” போன்ற அனைத்து இந்திய பணி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்த பணிகளுக்கு நேரடியாக ஆட்களை நியமிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இடஒதுக்கீட்டை பறிக்கும் வகையில் 45 பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது; யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் (UPSC) பதிலாக ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்’ (RSS) மூலம் அரசு ஊழியர்களை நியமிப்பதன் மூலம், நரேந்திர மோடி அரசியலமைப்பை தாக்குகிறார்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியமான பதவிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் SC, ST மற்றும் OBC பிரிவினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது.

நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன்.

இதை சரி செய்வதற்கு பதிலாக, குறுக்குவழி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள். இது UPSCக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியின் மீதான தாக்குதலாகவும் உள்ளது.

ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள், முக்கிய அரசாங்கப் பதவிகளை ஆக்கிரமிப்பதன் மூலம் என்ன செய்வார்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் SEBI. அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதி இரண்டையும் புண்படுத்தும் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும். இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர, ‘ஐ ஏ எஸ்’ பணியை தனியார்மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

The post பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியத்தின் பதிப்பு அரசியலமைப்பை அழிக்கவும், இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது: ராகுல் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rama Rajiyah ,Rahul Gandhi ,Delhi ,UPSC ,Union Government ,BJP ,Rama Rajiyam ,
× RELATED ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்;...