×

பிறவா நிலையை அருளும் அமிர்தகடேஸ்வரர்

நாயக்கன்பேட்டை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வட்டத்தில் அமைந்த நாயக்கன்பேட்டை என்ற கிராமத்தில் அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமணம், உக்ரரத சாந்தி அதாவது அறுபதாம் வயதின் தொடக்கம், சஷ்டியப்த பூர்த்தி (அறுபதாம் ஆண்டின் நிறைவு), பீமரத சாந்தி (70 ஆம் ஆண்டின் நிறைவு), சதாபிஷேகம் (எண்பதாம் ஆண்டின் நிறைவு) மற்றும் ஆயுஷ் ஹோமம் முதலான தனித்துவமான விசேஷங்கள் நடைபெறுகின்றன. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக சஷ்டியப்தப் பூர்த்தி அதிகமாக நடைபெறும் தலமாக இத்தலம் இப்பகுதியில் புகழ்பெற்று விளங்குகிறது. வேகவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளதால் இத்தலம் “வட திருக்கடையூர்” என்றும் அழைக்கப்படுகிறது.

முன்னொரு காலத்தில் நாயக்கன்பேட்டையில் குடிநீர் வேண்டி மக்கள் குளம் ஒன்றைத் தோண்ட அதிலிருந்து ஊற்று நீர் பெருக்கெடுத்தது. குளத்தின் நடுவிலிருந்து ஈசன் சுயம்பு மூர்த்தியாக வெளிப்பட்டார். நீரிலிருந்து அமிர்தம்போல வெளிப்பட்டவர் என்பதால் இத்தல ஈசனுக்கு “அமிர்த கடேஸ்வரர்” என்று பெயர் சூட்டி மக்கள் வழிபடத் தொடங்கினார்கள்.
கோவிலுக்குள் நுழைந்ததும் இடது புறத்தில் ஸ்ரீவிநாயகர் சன்னதியும் வலது புறத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் சந்நதியும் அமைந்துள்ளன. கோயிலுக்குள் பலிபீடமும் தொடர்ந்து ஒரு சிறிய சந்நதியில் ஈசனை நோக்கி நந்தியெம்பெருமான் அமர்ந்துள்ளார்.

கருவறையில் ஈசன் அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி கிழக்குத் திசைநோக்கி அமைந்து அருள்பாலிக்கிறார். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் அமர்ந்து அருளுகிறார். அம்பாள் இத்தலத்தில் அம்பாள் அபிராமி என்ற திருநாமம் தாங்கி நின்ற திருக்கோலத்தில் சதுர்புஜநாயகியாக அருள்பாலிக்கிறாள்.

கோட்டங்களில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா மற்றும் ஸ்ரீதுர்க்கை முதலான அமைந்துள்ளனர். வெளித்திருச்சுற்றுப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், ஸ்ரீபைரவர், நவகிரக நாயகர்கள், ஸ்ரீ சனீஸ்வரர் மற்றும் சூரியன் சந்நதிகள் அமைந்துள்ளன.சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் சரஸ்வதி பூஜை, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரங்களில் சிறப்பு வழிபாடு, மார்கழியில் திருவாதிரை, தைப் பொங்கல், தைப்பூசம், ரத சப்தமி, தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அன்று விளக்கு பூஜை, மாசியில் மகா சிவராத்திரி, மாதப் பிரதோஷ வழிபாடு முதலான உற்சவங்கள் இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றன.

வன்னி மற்றும் வில்வம் இத்தலத்தின் ஸ்தல விருட்சங்களாகும். இத்தலத்தில் தினமும் இருகால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.பக்தர்களின் வழிபாட்டிற்காக இத்தலம் காலை ஆறு மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் மாலை நான்கு முப்பது மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.செங்கல்பட்டு காஞ்சிபுரம் மார்க்கத்தில் வாலாஜாபாத்தைக் கடந்ததும் வரும் ஏகனாம்பேட்டையிலிருந்து இடதுபுறம் திரும்பி சுமார் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் நாயக்கன்பேட்டையை அடையலாம்.

ஷஷ்டியப்தப் பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் முதலான விசேஷங்களை செய்ய விரும்புவோர் முன்கூட்டியே ஆலய நிர்வாகிகளான திரு.ஏ.ராமு, (கைப்பேசி எண்: 6382901793) மற்றும் திரு.கே.ரவிச்சந்திரன் (கைப்பேசி எண்: 9843091364) ஆகியோரைத் தொடர்புகொண்டால் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து தருகிறார்கள்.

ஆர்.வி.பதி

The post பிறவா நிலையை அருளும் அமிர்தகடேஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Amrithakadeswarar ,Arulmigu Abhirami Udanurai Amrithakadeswarar Temple ,Nayakkanpettai ,Walajabad taluk ,Nayakkanpettai Kanchipuram district ,Ugrarata Shanthi ,Sashtyapta ,Bhimaratha Shanthi… ,
× RELATED கிறிஸ்துமஸை வரவேற்போம்!