×

பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை தமிழ் மணக்கும் வாரமாக கொண்டாடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது: காலத்தினை வென்ற பாடல்களை நமக்கு தந்தவர் பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தமிழை வளர்த்தல் ஒன்று; சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கை பாதை வகுத்து தந்தவர் புரட்சி கவிஞர். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சி கவிஞர். 1929ம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் அண்ணா. கலைஞர் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சி கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990ம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை கலைஞர் நாட்டுடைமையாக்கினார்.

இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமைவாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கை பட்டயமாக உருவாக்கி தந்தவராவார். அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சி கவிஞர். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கி போற்றும். பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு; அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சி புயல்வீசும்; எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களை சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன.

புரட்சி கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாக கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம். இத்தகைய பாரதிதாசன் பரம்பரை கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

1. கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்: ‘எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்’ என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
2. பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது: தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர் / கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
3. தமிழ் இலக்கியம் போற்றுவோம்: புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாக கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.

4. பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்: மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
5. தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்: தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இதுபோன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாக கொண்டாடப்படும். தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். பாவேந்தரின் கவிதைகளை நாளும் படிப்போம்; நானிலம் முழுவதும் அவரின் சிந்தனைகளை பரப்புவோம்; தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம். ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்’ என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.

‘கடல் போல செந்தமிழை பரப்ப வேண்டும்’ என்றார் பாவேந்தர். செந்தமிழை பரப்ப இந்த விழாக்கள் பயன்படும். ‘வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பை காட்ட எழுந்திரு’ என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தை காட்ட இந்த விழாக்கள் பயன்படும். ‘தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்’ என்றார் பாவேந்தர். அந்த தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை தமிழ் மணக்கும் வாரமாக கொண்டாடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bharathidasan ,Tamil Marrying Week ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Bavendar Bharathidasan ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து