×
Saravana Stores

பென் ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: 2வது டெஸ்டில் ஆஸி. வெற்றி

லண்டன்: ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 416 ரன் குவித்தது. ஸ்மித் 110, ஹெட் 77, வார்னர் 66, லபுஷேன் 47 ரன் விளாசினர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டக்கெட் 98, புரூக் 50, கிராவ்லி 48, போப் 42 ரன் எடுத்தனர். இதையடுத்து, 91 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 279 ரன் குவித்து ஆட்டமிழந்தது.

கவாஜா 77, ஸ்மித் 34, லபுஷேன் 30, வார்னர் 25, கேரி 21 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு 4, டங், ராபின்சன் தலா 2, ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 371 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 4ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்திருந்தது. டக்கெட் 50, ஸ்டோக்ஸ் 29 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்தது. டக்கெட் 83 ரன் (112 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஹேசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கேரி வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த பேர்ஸ்டோ 10 ரன் எடுத்த நிலையில், தனது கவனக்குறைவால் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் பிராடு பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பவுண்டரியும் சிக்சருமாக விளாசி ஆஸி. பந்துவீச்சை தவிடு பொடியாக்கினார். இதனால் வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி நிலவியது. கிரீன் வீசிய 56வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சருடன் சதம் அடித்த ஸ்டோக்ஸ், 197 பந்தில் 150 ரன்னை கடக்க… ஆஸி. வீரர்களை பதற்றம் பற்றிக் கொண்டது. டிரிங்க்ஸ் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் 155 ரன் எடுத்து (214 பந்து, 9 பவுண்டரி, 9 சிக்சர்) ஹேசல்வுட் வேகத்தில் கேரி வசம் பிடிபட்டார்.

ராபின்சன் 1, பிராடு 11, ஜோஷ் டங் 19 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆண்டர்சன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் தலா 3, கிரீன் 1 விக்கெட் வீழ்த்தினர். ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 43 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. அணி 2-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் ஜூலை 6ம் தேதி தொடங்குகிறது.

The post பென் ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்: 2வது டெஸ்டில் ஆஸி. வெற்றி appeared first on Dinakaran.

Tags : Ben Stokes ,Aussies ,London ,England ,Ashes ,Australia ,Aussie ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…