×

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது . ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் பதில் மனுவை பெறாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க பட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.

தமிழக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை செல்லாது என அறிவித்த உயர்நீதிமன்றம். தொடர்ந்து புதிய சட்டம் இயற்ற பரிந்துரைகளை வழங்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. இந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான், கடந்த 2022ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் 2023 மார்ச் 8ஆம் தேதி வரை திருப்பி அனுப்பினார்.

அதன் பின்னர் மார்ச் 23ஆம் தேதி இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் ஏப்ரல் 7ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தை தான் செல்லாது என அறிவிக்கக்கோரி 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் உறுப்பினர்களாக கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தவிர தனியார் விளையாட்டு நிறுவனங்கள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் தமிழக அரசின் தடை சட்டத்தால் தங்களுடைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பாதிப்பு எதிர்கொள்வதாகவும், தமிழக அரசினுடைய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6ஆம் தேதி ஒன்றிய அரசினுடைய தகவல் தொழில் நுட்பத்துறை ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் திருத்த விதிகளை அறிவித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இளைஞர்கள் கண் பார்வை குறைவு, நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது சம்மந்தமாக எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், அடிப்படை இல்லாமலும் பொது உணர்வை சுட்டிக்காட்ட இந்த சட்டத்தை இயற்றுவதற்கு தமிழக அரசுக்கு தகுதி இல்லையென்றும், அதிகாரம் இல்லையென்றும் தெரிவித்தது. எனவே உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டத்தை மீண்டும் இயற்ற உள்ளதாகவும், சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பரத் சக்கரவர்த்தி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிவலி ரம்மி விளையாட்டு என்பது திறமைக்கான விளையாட்டுக்கும், வாய்ப்பிற்கான விளையாட்டிற்க்கும் உள்ள வேறுபாட்டை விளக்காமல் அனைத்து ஆன்லைன் விளையாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது சட்ட விரோதமானது எனவும் அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, தடை செய்ய என்ன தவறு இருக்கிறது. தடை செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்களின் நலம் முக்கியம் என்றும் ஆன்லைன் விளையாட்டுக்களால் அதிக உயிரிழப்புகள் நடக்கிறது. அதனால் தான் தடை செய்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் இது போல குதிரை பந்தயம், லாட்டரிக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அதியமான் சுந்தரம் இந்த பொது சட்டம் என்பது திறமைக்கான விளையாட்டு என்பது இல்லை இது சூதாட்டம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். திறமைக்கான விளையாட்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது என அவர் வாதிட்டார். ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளை நேரடியாக விளையாட அனுமதிக்கும் போது ஆன்லைன் மூலம் விளையாடுவதை எப்படி தடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞ்சர் கபில் சிபில் ஆஜரானார். அவர் வைத்த வாதம் என்னவென்றால் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் வேறு ஏற்கனவே கொண்டுவந்த சட்டம் வேறு என்று விளக்கமளித்தார்.

மேலும் தமிழக அரசு சட்டம் கொண்டுவருவதற்கு அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசுக்கு இந்த சட்டம் இயற்ற தகுதி இல்லை என்றும் மேலும் இதுபோன்ற தளங்களில் பணம் சம்பாதிக்கும் குடும்பங்களை சீரழிக்கப்படுகிறது. அந்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் மனதால் எந்த பாதிப்பும் வரக்கூடாது மேலும் தமிழக மக்களின் நலனை காக்கும் கடமை எங்களுக்கு உள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான கபில் சிபில் வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இப்போது எந்த ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இந்த வழக்குகளின் விசாரணையை ஜூன் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

The post ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,ICourt ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...