×

லாரியில் கடத்த முயன்ற 200 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைபொருள் போலீசார் அதிரடி

காஞ்சிபுரம்: வெளிமாநிலத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 200 மூட்டை ரேஷன் அரிசியை குடிமைபொருள் போலீசார் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு, லாரியின் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, கலெக்டர் கலைச்செல்வி மோகனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கலெக்டர் உத்தரவின்படி, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, குடிமைபொருள் காவல் ஆய்வாளர் சசிகலா, குடிமைபொருள் வழங்கல் வட்டாட்சியர் இந்துமதி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த லாரி, போலீசாரை கண்டதும் மின்னல் வேகத்தில் சென்றது. இதனால் போலீசார், லாரியை விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பெரும்புலிவாக்கம் என்ற இடத்தில் மடிக்கி பிடித்தபோது, லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி சென்றார். இதனையடுத்து போலீசார், லாரியை சோதனையிட்டதில், 200 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர், காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து குடிமைபொருள் போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரியில் கடத்த முயன்ற 200 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: குடிமைபொருள் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...