×

ஜோதிடத்தில் நாகதோஷம்!

இன்றைய காலத்தில் வீட்டில் பலரின் ஜாதகத்தை தூசு தட்டி எடுப்பதே திருமணக் காலக் கட்டத்தில்தான். அதுவரையிலும் அந்த குழந்தைகளுக்கு என்ன தோஷம் உள்ளது, என்னென்ன தோஷம் இல்லை என்பதே பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை. ஜாதகருக்கும் தெரிவதில்லை. அதற்காக, எப்பொழுதும் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. பிள்ளைகளின் தோஷங்களை தெரிந்து கொள்ளும் போது அவர்களுக்கான தடைகள் ஏன்? என்பது பற்றிய விழிப்புணர்வு எப்பொழுதும் இருக்கும். பெற்றோர்களும் அப்பொழுதுதான் தங்களின் குழந்தைகளின் ஜாதகத்தை ஜோதிடரிடம் எடுத்துச் செல்கின்றனர். சில நேரங்களில் ஜோதிடரையே சந்தேகப்பட்டு வேறு ஜோதிடரிடம் இந்த தோஷம் உள்ளதா என கேட்கும் சூழ்நிலை உண்டாகிறது.ஜோதிடம் என்பது வாழ்க்கையின் வெளிச்சம் காட்டும் வழிகாட்டி அவ்வளவே. அதை வைத்துக்கொண்டு வாழ்வை வளைப்பதோ அல்லது உலகத்தை மாற்றுவதோ இல்லை. உன் வாழ்வில் ஏற்படும் இடர்ப்பாடுகளை சரிசெய்து கொண்டே சென்றால் அதுவே வாழ்வின் சரியான வெற்றி. இல்லாவிடில், கால விரயமாகி வாழ்வு ஒரு பக்கம் இழுத்துச் சென்றுவிடும். ஜோதிடத்தில் எவ்வளவோ தோஷங்கள் இருந்தாலும் அதில், குறிப்பிடும்படியாக நாகதோஷமும் ஒன்றாகும். பலருக்கும் நாகதோஷம் பற்றிய தெளிவான கருத்துகளும் இல்லை, சிந்தனையும் இல்லை. நாகதோஷத்தைப் பற்றி கொஞ்சம் விரிவாகக் காண்போம்.

ஜாதகத்தில் நாகதோஷம் ஏன்? எப்படி?

நாகதோஷம் என்பது ராகு – கேது என்ற சாயா கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் தோஷமாகும். இந்த நாகதோஷமானது மூன்று முதல் நான்கு வகைகளில் இருக்கிறது. அதாவது, லக்னத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்திருக்கும்போது முதலாவது வகையிலும் லக்னத்திற்கு இரண்டாம் (2ம்) பாவகத்திலும், எட்டாம் (8ம்) பாவகத்திலும் ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்திருக்கும் தோஷமானது இரண்டாவது வகையிலும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்ற சப்த கிரகங்களும் ராகு – கேது என்ற அடைப்புக்குள் அகப்பட்டு தங்களின் முழு சக்தியையும் இழப்பது என்பது தோஷமாக மாறுகிறது. இது மூன்றாவது வகையிலும் கால சர்ப்ப தோஷமாக செயல்படுகிறது.இதுமட்டுமின்றி, லக்னத்திற்கு ஐந்தாம் பாவகத்திலும் (5ம்), பதினோராம் பாவகத்திலும் (11ம்) சாயா கிரகங்களான ராகு – கேது அமர்வது நான்காவது வகையிலும் உள்ளது. இவ்வாறு நாகதோஷங்கள் பல்வேறு பாவகங்களிலும் அமர்ந்து தோஷங்களை வெவ்வேறு அமைப்புகளை ஏற்படுத்துகிறது.நாக தோஷம் என்பது சென்ற பிறவியில் சர்ப்பங்களை வதைத் திருந்தாலும் சர்ப்பத்தினை அடித் திருந்தாலும் இது வருகிறது. இந்த சர்ப்ப தோஷம் என்பது ஒருவருக்கு மட்டுமே வருவதில்லை. வழி வழியாக தலைமுறை தலைமுறையாக வருகிறது என்பதே ஆச்சர்யம்தான். அதாவது, ஜெனிடிக்கல் தொடர்பு என்றே சொல்ல வேண்டும்.

நாகதோஷம் என்ன செய்யும்?

நாக தோஷங்கள் சாயா கிரகங்கள் அடிப்படையில் ஏற்படும் தோஷம். இந்த கிரகங்கள் வக்ரகதியில் இருக்கும். இந்த தோஷங்கள் இரண்டாம் பாவகம் (2ம்) என்று சொல்லக்கூடிய குடும்ப ஸ்தானத்திலும் ஆரம்பக் கல்வி ஆகியவைகளுக்கு தொடர்பான பாவகமாக விளங்குகிறது. இங்கு அமரக்கூடிய சாயா கிரகங்கள் ஆரம்பக் கல்வியில் தடை ஏற்படுத்தும் விதத்திலும் அதீத விளையாட்டு சுபாவங்கள் ஏற்படும் விதத்திலும் அமையும். சிலருக்கு அதே சாயா கிரகத்தின் திசா – புத்திகள் வேலை செய்யும் பட்சத்தில் இவை தடை ஏற்படுத்துகிறது. அதுபோலவே, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் திருமணம் போன்ற சுபநிகழ்வுகளில் தடை ஏற்படுத்தும் விதமாக இந்த சாயா கிரகங்களின் அமைப்பு இருக்கும். சிலருக்கு பேச்சில் மாறுபாடு இருக்கும். இரண்டாம் பாவகத்தில் ராகு அமர்ந்திருந்தால் அதிக பேச்சு, வரம்பு மீறிய பேச்சுகள் உண்டாகும். அதே இரண்டாம் பாவகத்தில் கேது அமர்ந்திருந்தால் அதிகம் பேசமாட்டார்கள். எல்லாவற்றிற்கும் அமைதியை பதிலாகத் தருவார்கள். இன்னும் சிலருக்கு திக்குவாய் தன்மை கூட ஏற்படுவதுண்டு. இவையே நாக தோஷப்பாதிப்பின் சில அடிப்படை அமைப்புகள் ஆகும். இதுபோல இன்னும் பல மாறுபாடுகள் இருக்கும். சிறு வயதில் ஜாதகரின் வளர்ச்சியை தடுக்கும்.

நாகதோஷ தடைக்கு என்ன செய்யலாம்?

ராகு – கேது ஸ்தலங்களுக்கு சென்று அங்கு ராகுகாலத்தில் செய்யப்படும் பூஜைகளில் கலந்து கொண்டு நாகதோஷத்தை குறைக்க முற்படலாம். அதற்காக, காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் ஆகிய திருத்தலங்கள் உள்ளன. அங்குள்ள முறைப்படி நீங்கள் அந்தந்த பூஜைகளில் கலந்துகொள்வது நலம் பயக்கும். சுபகாரியங்கள் யாவும் தடையின்றி முன்னோக்கிச் செல்வதற்காகவே இந்த தோஷங்கள் செய்யப்படுகின்றன. நதிகள் சங்கமிக்கும் இடங்களிலும் நீங்கள் சர்ப்ப சாந்தி தோஷம் செய்துகொள்வதும் சிறப்பாகும். இதற்கு கொடுமுடி, சங்கமேஸ்வரர் திருத்தலங்களில் இது சிறப்பாக செய்யப்படுகிறது.

பரிகாரங்கள் செய்வதினால் நாகதோஷம் நீங்கிவிடுமா?

பரிகாரங்களை செய்வதனால் முற்றிலும் உங்களின் நாகதோஷம் உங்களைவிட்டுபோய் விடாது. நாகதோஷம் குறைய வாய்ப்புண்டு. நாகதோஷத்தினால் ஏற்படும் தடைகளை தற்காலிகமாக விலக்கி உங்களுக்கு சுபகாரியங்கள் செய்வதற்கு ஏதுவாக அமையும் என்பதே உண்மையாகும். இப்பிறவியல் நீங்கள் எந்த சர்ப்பத்தை அடிக்காமலும் தொந்தரவு செய்யாமலும் இருப்பதே உங்களுக்கு மேலும் நாகதோஷம் ஏற்படாமல் இருக்கும். இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்குமானது. ஆனால், மனிதன் மட்டுமே அனைத்து உயிரினங்களையும் கட்டுப்படுத்தி தான் மட்டும் வாழவேண்டும் என்ற பேராசையில் இருக்கிறான் என்பதே உண்மை.

The post ஜோதிடத்தில் நாகதோஷம்! appeared first on Dinakaran.

Tags : Nagatosha ,Nakathosham ,
× RELATED நாகதோஷம் போக்கும் நாகநாதர்