×

ஏஎஸ்பி பல்வீர்சிங் பற்களை பிடுங்கிய விவகாரம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது: குற்றப்பிரிவு போலீசார் ஆவணங்களை ஒப்படைத்தனர்

நெல்லை: அம்பை. அருகே விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணியிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து அவர் உடனே விசாரணையை தொடங்கினார். நெல்லை மாவட்டம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகம்மது சபீர் ஆலம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அம்பை, விகேபுரம், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அங்கு பணியாற்றிய உளவுத்துறை போலீசாரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அலுவலரை நியமித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் கார்த்திகேயன் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டார்.

உடனடியாக நெல்லை வந்த அமுதா சேரன்மகாதேவி சப்.கலெக்டரிடம் விசாரணை ஆவணங்களை பெற்றுக் கொண்டார். பின்னர் கடந்த 10ம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினார். முதல் நாளில் யாரும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், போலீசாரிடம் மட்டும் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த 17, 18ம் தேதிகளில் இரண்டாம் கட்டமாக விசாரணை அதிகாரி அமுதா அம்பை. தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். இதற்கிடையே பல்வீர்சிங் ஐஏஎஸ் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தனது முதல் கட்ட அறிக்கையை அமுதா ஐஏஎஸ் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நெல்லை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பற்கள் பிடுங்கிய வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்ஸ்பெக்டர் உலகராணியிடம் ஒப்படைத்தனர். அவர், உடனே விசாரணையை தொடங்கினார். இது காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* மருத்துவ ஆவணங்களை கேட்கமுடியாது
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், சிவசக்தி நகரைச் சேர்ந்த அருண்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மீது பொய் வழக்குப்பதிவு செய்த வி.கே.புரம் போலீசார், சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாக தாக்கினர். எனது 4 பற்களும் பிடுங்கப்பட்டன. பின்னர் என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விபரங்களைக் கேட்டு அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தேன். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால் எனது மனு நிராகரிக்கப்பட்டது. எனவே அம்பாசமுத்திரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என் மீதான வழக்கு விபரங்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘எப்ஐஆர், கைது ஆவண குறிப்பு, சிறையில் அடைப்பதற்கான மாஜிஸ்திரேட் உத்தரவு ஆகியவற்றை கேட்பதற்கான உரிமை மனுதாரருக்கு உள்ளது. மருத்துவ ஆவணங்கள், கைது வாரண்ட் உள்ளிட்டவற்றை கேட்க முடியாது’’ என கூறப்பட்டது. இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, விசாரணையை ஏப். 24க்கு தள்ளி வைத்தார்.

* காவல் நிலையங்களில் ரகசிய ஆய்வு
வி.கே.புரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் சம்பவம் நடந்த நாட்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். மூன்று காவல் நிலையங்களுக்கும் நேற்றிரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை நேரில் சென்று ரகசியமாக ஆய்வு நடத்தினர். ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் தலா ஒரு மணி நேரம் என மொத்தம் மூன்று மணி நேரம் ஆய்வு நடத்தினர். இதனால் இவ்வழக்கு தற்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

* ஏஎஸ்பி, இன்ஸ்பெக்டருக்கு சம்மன்
சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை துவக்கிய நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஏஎஸ்பி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் ஆகியோர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டனர்.

The post ஏஎஸ்பி பல்வீர்சிங் பற்களை பிடுங்கிய விவகாரம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது: குற்றப்பிரிவு போலீசார் ஆவணங்களை ஒப்படைத்தனர் appeared first on Dinakaran.

Tags : CBCID ,CPCID ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...