×

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5வது இடத்தை பெற்றுள்ள தமிழ்நாடு முதலிடத்துக்கு முன்னேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாடு, முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த வீரர் – வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கி பேசியதாவது: சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்களைப் பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதற்காக நாம் இங்கே கூடி இருக்கிறோம். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள் என்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அளவில் பார்த்தால் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு பதக்கங்களை வென்ற 20 விளையாட்டு வீரர்களுக்கு நேற்றுரூ.9 கோடியே 40 லட்சம் உயரிய ஊக்கத் தொகை பரிசுகள் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய திராவிட மாடல் அரசானது, அனைத்துத் துறைகளிலும் அதிக கவனம் செலுத்துவதன் மூலமாக, அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளர்த்து வந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று.

இந்தத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது. விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார். அந்தத் துறையின் கேப்டனாக இருந்து, அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார். அவருக்கும் அவரது துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘முதலமைச்சர் கோப்பை’ என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 15 வகையானப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள கிராமங்களில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்களை அரசு அமைத்துவருகிறது. போட்டிகளில் கலந்து கொள்வது – விளையாடுவது என்பது உடல் வலிமையும் உள்ள வலிமையும் தொடர்புடையது! படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதில் பங்கெடுக்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும்.

‘அறிவை விரிவு செய்’ என்பதைப் போலவே, ‘உடலை உறுதி செய்’ என்பதும் நமது முன்னெடுப்பாக இருக்க வேண்டும். அறிவை விரிவு செய்ய பள்ளி, கல்லூரி அளவில் ஏராளமான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறோம். அதேபோல் உடலை உறுதி செய்ய அதற்கான முன்னெடுப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செய்ய வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாடு, முதலிடத்துக்கு முன்னேற வேண்டும். விளையாடுவது என்பது உடல் வலிமையும் உள்ள வலிமையும் தொடர்புடையது! படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதில் பங்கெடுக்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும்.

The post ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5வது இடத்தை பெற்றுள்ள தமிழ்நாடு முதலிடத்துக்கு முன்னேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Asian Games ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,
× RELATED பொன்னமராவதி ஒன்றியத்தில் கலைஞரின்...