×

நிறைவடையும் தருவாயில் தக்காளி அறுவடை விலை வீழ்ச்சியால் குப்பையில் வீசப்படும் அவலம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் நிறைவடையும் தருவாயில் தக்காளி அறுவடை இருப்பதால், தொடர்ந்து விலை வீழ்ச்சி அடைவதோடு, குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, பல கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது. இந்த ஆண்டில் கடந்த மார்ச் மாத துவக்கத்திருந்து நன்கு விளைந்த தக்காளிகளின் அறுவடை தீவிரமானதுடன், மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட தக்காளி வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதனால், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பிருந்து தக்காளி விலை சரிய துவங்கியது.

பகலில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால், நல்ல விளைச்சலுடன் இருக்கும் தக்காளிகள் முழு பருவம் அடைவதற்கு முன்னதாகவே செடியில் பழுத்து விடுகிறது. இதனால், அதனையும் விரைந்து அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் அதிகாரிகள் விவசாயிகள் ஈடுபட்டதால், தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10க்கும் குறைவாக விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.அதிலும் கடந்த இருவாரமாக, சுற்றுவட்டார கிராமங்களில் தக்காளி அறுவடை நிறைவடையும் தருவாயில் உள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட அதிகமானது. இதனால் கடந்த சில நாட்களாக சந்தையில் போதிய விலையில்லாமல் போனது.

இதில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.7க்கும் குறைந்த பட்சமாக ரூ.5க்கும் விற்பனையாகிறது. கடைகளில் சில்லரை விலைக்கு ரூ.8 முதல் ரூ.10 வரையிலும் என தொடர்ந்து குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் கோடை மழை வலுக்கும் என்பதால், வாடிய செடிகளில் தக்காளிகளை விரைந்து அறுவடை செய்யும் பணியை நிறைவு செய்து, அடுத்து புதிய தக்காளி சாகுபடிக்கு தயாராக உள்ளோம் என விவசாயிகள் தெரிவித்தனர். தொடர் விலை வீழ்ச்சியாலும், பழுத்து,வெடிக்கும் தக்காளியை பறிக்க கூலி அதிகமாகும் காரணத்தாலும் விற்பனையாகாமல் தேக்கமடையும் தக்காளிகள் அனைத்தும் குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

The post நிறைவடையும் தருவாயில் தக்காளி அறுவடை விலை வீழ்ச்சியால் குப்பையில் வீசப்படும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,
× RELATED பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்