×

கலைஞர் நூல்களை நாட்டுடைமையாக்குவதை ஏற்ற தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கனிமொழி எம்.பி

சென்னை: கலைஞரின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அனுமதியளித்த தாயார் ராசாத்திக்கும், இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கனிமொழி எம்.பி நன்றி தெரிவித்தார். கலைஞரின் நூற்றாண்டு விழாவானது தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படவுள்ள நிலையில் கலைஞர் எழுதிய படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்க ஆவன செய்யுமாறு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படைப்புகள், வெளியிடப்பட்ட ஆண்டு. பதிப்பகம், உரிமை பற்றிய விவரங்களுடன் அனைத்தும் காலத்தால் நிலைத்து / நிலைக்கத்தக்க அளவிலும், அனைத்துத் தலைமுறையினரும் படித்துப் பயன்பெறக் கூடியவையாகவும், ஐந்து முறை முதலமைச்சராக இருந்து பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்த முத்தமிழறிஞர் கலைஞரின் இந்தப் படைப்புகளைத் தமிழ்நாடு அரசு நாட்டுடைமை ஆக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த நூல்களின் பதிப்புரிமை முழுவதும் தமிழ்க்கனி பதிப்பகத்தில் உள்ளது என்பதைத் தெரிவித்ததோடு நாட்டுடைமையாக்கப்படும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூல்களுக்குத் தமிழ்நாடு அரசு எவ்வித நூல் உரிமைத் தொகையும் தமக்குத் வேண்டியதில்லை என்பதையும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, தாய்மொழியாம் தமிழுக்கு செம்மொழித் தகுதியினை பெற்றுத் தந்தவரும் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் வாழ்நாள் முழுவதும் எழுத்தாகவும், பேச்சாகவும், மூச்சாகவும் வாழ்ந்து, எண்பதாண்டு காலம் பொது வாழ்வு, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் கருத்துக் கருவூலங்கள் உலக மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அவரின் நூல்கள் அனைத்தையும் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கி அரசு ஆணையிட்டது. மேலும், இந்நிகழ்வினை முதலமைச்சர் அலுவல் அறையில் நடத்திடத் தேவைப்படும் சில்லரைச் செலவினங்களை மேற்கொள்ள தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு ரூ. 20,000/- நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டது. இத்தகைய கலைஞரின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அனுமதியளித்த எனது தாயார். ராசாத்தி அவர்களுக்கும், இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் தலைவர் கலைஞர் அவர்களின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவிலான மக்களிடம் சென்று சேரும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்றும் தெரிவித்தார்.

 

The post கலைஞர் நூல்களை நாட்டுடைமையாக்குவதை ஏற்ற தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கனிமொழி எம்.பி appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Rasathi ,M.K.Stalin Kanimozhi ,
× RELATED தொலைதூர கிராம மக்களும் 1962க்கு...