×

வாலிபரை கடத்திய வழக்கில் கைதான ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்திய வழக்கில் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறையில் ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக ஜெயராம் பணியாற்றி வந்தார். இவர் தனது தோழியான மகேஸ்வரியின் வேண்டுகோளுக்கு இணங்க காதல் விவகாரத்தில் தலையிட்டு வாலிபரை கடத்த தனது வாகனத்தை வழங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வாலிபரின் தாய் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, கூடுதல் டிஜிபி ஜெயராம் காரில் வாலிபரை இறக்கி விட்டது உறுதியானது.

அதேநேரம் இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஆள் கடத்தல், குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உறுதியானதால், கூடுதல் டிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி திருவாலங்காடு போலீசார் கூடுதல் டிஜிபி ஜெயராமனை நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து கடத்தல் விவகாரம் தொடர்பாக கூடுதல் டிஜிபி ஜெயராமனிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வாலிபர் கடத்தல் வழக்கில் கூடுதல் டிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டதால், தமிழக காவல்துறை டிஜிபி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி கூடுதல் டிஜிபி ஜெயராம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அதற்கான அறிக்கையை உள்துறைக்கு அனுப்பினார். அதனை தொடர்ந்து தமிழக அரசு கூடுதல் டிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அதற்கான கடிதமும் அவரிடம் நேற்று காலை வழங்கப்பட்டது. கூடுதல் டிஜிபி ஒருவர் வாலிபர் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வாலிபரை கடத்திய வழக்கில் கைதான ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Armed Forces Additional DGP ,Jayaram ,Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu Police Department ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்