
சென்னை: அரக்கோணம் கவுன்சிலரிடம் எப்படி துப்பாக்கி வந்தது? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சமூகவலைதள பதிவில் வெளியிட்டுள்ள பதிவு: அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது.
போதை இளைஞரிடம் கத்தி – பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இந்த உண்மையை சொன்னால் கோபம் வருகிறது? இந்த அவலத்தை கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன் – கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதல்வர்? நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களை காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post அரக்கோணம் கவுன்சிலரிடம் எப்படி துப்பாக்கி வந்தது?.. எடப்பாடி பழனிசாமி கேள்வி appeared first on Dinakaran.
