×
Saravana Stores

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

நன்றி குங்குமம் டாக்டர்

ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குக் காய்ச்சல், சளி, இருமல், தும்மல் என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச்சீட்டில் எழுதித் தருகிறார். அதை வாங்கிச் சாப்பிடுகிறோம். எல்லாம் சரியாகிவிடுகிறது. உண்மையில் எல்லாம் சரியாகி விட்டதா? முதலில் நமது உடல் தனக்குள் ஏற்படுகிற பாதிப்புகளை நம்முடைய பாதுகாப்பு அமைப்புக்கும், நமக்கும் தெரியப்படுத்துகிற அறிகுறிகளே காய்ச்சல், சளி, தும்மல், இருமல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னொரு வகையில் உடலின் உயிராற்றலைப் பாதிக்கும் நுண்ணுயிரிகள் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள்) உடலுக்குள் நுழைந்திருப்பதைச் சொல்லும் எச்சரிக்கைதான், இந்த வெளிப்படையான பாதிப்புகள். இந்த எச்சரிக்கை நம்முடைய பாதுகாப்பு படையணிகள் யுத்தத்துக்குத் தயாராகச் சொல்வதற்கும் யுத்தம் நடத்துவதற்குமான முழக்கம்.

நம்முடைய உடலின் பாதுகாப்பு அமைப்பின் இன்னொரு விசேஷமான காரியம். ஒரு முறை உடலில் நுழைந்து உயிராற்றலுக்கும் உடலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் பயோடேட்டாவை, தன்னுடைய ஞாபகத்தொகுப்புகளில் பத்திரப்படுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல எதிரி நுண்ணுயிரியின் யுத்த முறைகளையும், யுத்தத் தந்திரங்களையும் அதற்கு எதிராக எடுத்த எதிர் நடவடிக்கைகளையும்கூடத் தன்னுடைய நினைவு அடுக்குகளில் பதிவு செய்து கொள்ளும்.

பலமும் பலவீனமும்

ஒரு முறை கொன்றொழித்த நுண்ணுயிரிகள் மீண்டும் உடலுக்குள் நுழைந்தால் போதும், உடனே ஒரு பொத்தானைத் தட்டி தன்னுடைய ஞாபகத் தொகுப்பிலிருந்து அந்த நுண்ணுயிரியை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் கணப்பொழுதில் எடுத்துவிடும். ஆனால், உடலினுள்ளே நுழைந்திருக்கும் நுண்ணுயிரியின் தன்மைகளைப் பற்றி நமது பாதுகாப்பு அமைப்பு அறியத் தொடங்குவதற்கு முன்னதாகவே நாம் சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிகள் அவற்றை அழித்துவிடுகின்றன.

அதனால் நம்முடைய பாதுகாப்பு அமைப்பில் அந்த நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லாமல் போய்விடுகிறது. அதற்குப் பிறகு எப்போது அந்த நுண்ணுயிரிகள் தாக்குதல் தொடுக்கும்போதும், வெளியிலிருந்து நுண்ணுயிர்க்கொல்லியின் ஆதரவு தேவைப்படும் அளவுக்கு உடல் பலவீனமாகி விடும். தூண்டத் தூண்ட துலங்கும் விளக்கு போலத்தான் நம்முடைய பாதுகாப்பு அமைப்பும் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களைத் தானே சமாளிக்கும்போது மேலும் மேலும் பலம் பெறும்.

பாக்டீரிசியான்

நமது உடல் ஆரோக்கியமாக, முழு பலத்துடன், உற்சாகமாக இயங்குவதற்கு நமது உடலுக்குள்ளேயே சுமார் ஒன்றரைக் கிலோ அளவுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை நமது உடலின் நண்பர்கள். இந்த நண்பர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றால், நமது உடல் மெல்ல மெல்ல நலிவடையும். இவர்களுடைய இருத்தல் மிக மிக அவசியம். நாம் தனியாகச் சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிக்கு என்ன தெரியும்? அதன் வேலை நுண்ணுயிரிகளை அழிப்பது. அந்த நுண்ணுயிரிகள் நல்லவையா? கெட்டவையா? என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. அழிக்கப்போகிற நுண்ணுயிரிகளின் வேலைகளைப் பற்றியும் அதற்குத் தெரியாது. ஆக, அது உடலுக்குள் புகுந்து நுண்ணுயிரிகள் அனைத்தையும், நல்லது கெட்டது அனைத்தையும் அழிக்கிறது.

நமது உடலில் நுழையும் தீய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை தொற்று போன்றவற்றை எதிர்க்கும் முதல் படையணி உடலில் உள்ள நன்மை நுண்ணுயிரிகள்தான். அது மட்டுமல்லாமல் அவை உடலுக்குத் தேவையான வைட்டமின் பியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், தொற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகின்றன. அதோடு அவை பாக்டீரிசியான் (bactericions) என்ற பொருளையும் உற்பத்தி செய்கின்றன. இந்தப் பாக்டீரிசியான்கள் இயற்கையான நுண்ணுயிர்க்கொல்லியாகச் செயல்படுகின்றன.

என்ன பாதிப்பு?

இத்தகைய நன்மை நுண்ணுயிரிகளையும் சேர்த்து நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கொன்றுவிடுகின்றன. ஒரு முறை நீங்கள் எடுக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளால் அழிந்துவிடும் நன்மை நுண்ணுயிரிகள் திரும்பவும் உருவாக, குறைந்தது ஆறு மாதங்களாகும்.அது மட்டுமல்ல தொடர்ந்து வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிகளால் தீமை பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் தற்காப்புத் திறன் கூடிக்கொண்டே போகிறது.

அதனால், வெளியிலிருந்து எடுக்கும் நுண்ணுயிர்க்கொல்லிகளின் அளவும் கூடிக்கொண்டே போகிறது. தேவைக்கு அதிகமான நுண்ணுயிர்க்கொல்லிகளை வெளியேற்றும் பணியைச் செய்யும் சிறுநீரகங்களும் சிரமப்படும். அளவுக்கு அதிகமான வேலைப்பளுவால் சில நேரம் சிறுநீரகங்கள் வேலைநிறுத்தம் செய்யவும் கூடும். உடல் பலவீனமடையும்.

எனவே, அநாவசியமாக நுண்ணுயிர்க்கொல்லிகளைச் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவி செய்வதே மருத்துவர்களின் தலையாய கடமை. எனவே, அவர்களும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.சரி, இயற்கையான எதிர்ப்புச்சக்தியை எப்படி அதிகரிப்பது? எதற்கெடுத்தாலும் மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும்.

உடல் தன்னுடைய பாதுகாப்பு படையைப் பயன்படுத்த அவகாசம் தரவேண்டும். தீமை நுண்ணுயிரிகளும் நன்மை நுண்ணுயிரிகளும் நம் உடலில் அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கமே முக்கியமான காரணம்.

எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு, சரிவிகித உணவு அவசியம். இந்த உணவே நம்முடைய எதிர்ப்புச்சக்தியைத் தூண்டிப் பாதுகாப்புப் படைக்குப் பலத்தைத் தரும். அந்தப் பலத்தால் எந்தத் தீய நுண்ணுயிரிகளையும் நமது உயிராற்றல் அழித்து, ஆரோக்கியத்தை நிலைநாட்டும்.

தொகுப்பு: சரஸ்

The post ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா? appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED பத்தென்றாலும் அது தரமா இருக்கணும்!