×

போதைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி மாவட்டத்திற்குள் கடந்த 6 மாதத்தில் ஊடுருவிய 25 கிலோ கஞ்சா பறிமுதல்

*மாவட்ட எஸ்பி நிஷா தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊட்டி ரயில் நிலையம் அருகே பேரணியை மாவட்ட எஸ்பி நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி சென்றனர்.

இப்பேரணி லோயர் பஜார் சாலை, கமர்சியல் சாலை வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது. பின்னர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏடிசி., மணிக்கூண்டு முதல் கேசினோ சந்திப்பு வரை சுமார் 1 கிமீ தூரத்திற்கு மாணவ, மாணவிகள் அணிவகுத்து நின்றனர். பின்னர் மாவட்ட எஸ்பி., நிஷா தலைமையில் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட எஸ்பி நிஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் பேரணி, மனித சங்கிலி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் போதை பொருட்களின் தீமை குறித்து எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்டது. போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள், காவல்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சேர்ந்து செயல்பட வேண்டும். இதேபோல் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகளில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓவிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் வாழ்க்கை முறை, உடல் நலம் உள்ளிட்ட அனைத்தையும் பாதித்து எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும்.

இளம் தலைமுறையினர் போதை பொருட்களை நாடாமல் விளையாட்டு, கல்வி உள்ளிட்டவைகள் மீது அடிமையாகி நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்து கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். ஒவ்வொரு வீட்டில் இருந்தும், மாவட்டத்தில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும் போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 24 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்து அழித்துள்ளோம். நடப்பு ஆண்டில் காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் மட்டும் 25 கிலோ அளவிற்கு கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். எம்டிஎம்ஏ., மெத்தபெட்டமைன் உள்ளிட்ட சிந்தட்டிக் போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர முதல்முறையா ஹைட்டோபோனிக்ஸ் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சிந்தெட்டிக் போதை பொருட்களை, இளைஞர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளதால், அவற்றை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்திற்குள் கஞ்சா பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில எல்லையில் அமைந்துள்ள கக்கனல்லா சோதனை சாவடி உள்ளிட்டவைகள் பலப்படுத்தப்பட்டு பஸ்கள், இதர சரக்கு வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டு சிந்தட்டிக் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு மூலமாக போதை பொருட்கள் தேவையையும், சோதனை மற்றும் கண்காணிப்பு மூலமாக விநியோகத்தையும் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கொண்டு வரக்கூடாது.

வார இறுதி நாட்களில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. எல்லையோர வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடப்படுகிறதா என ஆய்வு நடத்தப்படுகிறது. நக்சல் தடுப்பு பிரிவினர் எல்லையோர வனங்களில் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்கின்றனர்.

தற்போது நீலகிரி மாவட்ட எல்லையோர வனங்களில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை. TN-DRUG FREE என்னும் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

இதுதவிர அனைத்து பள்ளிலும் ஆன்டி டிரக் கிளப் (Anti drug club) உருவாக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட எஸ்பி நிஷா கூறினார். இதில் கூடுதல் எஸ்பி மணிகண்டன், டவுன் டிஎஸ்பி நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போதைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி மாவட்டத்திற்குள் கடந்த 6 மாதத்தில் ஊடுருவிய 25 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : -Drug Day ,District ,SP ,Nisha ,Ooty ,Nilgiris District Police ,World Day against Drug Abuse and Illicit ,District SP… ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு