×

அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்த அண்ணாமலை, நயினார்: மோதல் காரணமா?

மதுரை ஒத்தக்கடையில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மேடைக்கு பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்தார். அப்போது அங்கு இருந்த மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்ற பெயரை உச்சரிக்கும் முன்பாகவே விசில் அடித்து கைதட்டி கூச்சலிட்டபடி இருந்தனர். அண்ணாமலை பேச வந்தபோதும் அவரது பேச்சை தொடங்க விடாமல், தொடர்ந்து நிர்வாகிகள் முழக்கமிட்டபடி இருந்தனர். ஆனால் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரின் பெயர்களை உச்சரிக்கும் போது பாஜவினர் எந்தவித ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்தனர். அண்ணாமலை ஆதரவாளர்களின் இச்செயல் புதிய மாநிலத்தலைமையின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அண்ணாமலைக்கும், நயினாருக்கும் மோதல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் விடுதியில் தங்கியிருந்த அமித்ஷாவை அண்ணாமலை தனியாகவும், நயினார் நாகேந்திரன் தனியாக சந்தித்தனர். மேலும் அமித்ஷா மதுரை வந்த முதல்நாளில் அவரை வரவேற்க அண்ணாமலை வராததும் கட்சியினர் மத்தியில் பேசு பொருளாக மாறியது. தனது காரில் கட்சிக் கொடி இன்றி அண்ணாமலை விடுதிக்கு வந்திருந்ததும் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், நிர்வாகிகள் கூட்டத்திலும் அண்ணாமலையை குறிவைத்தே நிர்வாகிகள் ஆர்ப்பரித்து உற்சாகம் நிறைத்துள்ளனர். பாஜ மாநிலத்தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாளர்களின் இந்த தொடர் முழக்கம் புதிய மாநிலத்தலைவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது.

 

The post அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்த அண்ணாமலை, நயினார்: மோதல் காரணமா? appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Amit Shah ,Union Home Minister ,Madurai Othakadai ,BJP ,president ,State General Secretary ,Karu. Nagarajan ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்