×

பெருமை வாய்ந்த பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேயர்

தெலுங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிந்தரேவுலா என்னும் இடத்தில் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேய சுவாமி கோயில்’’ உள்ளது.

இயற்கையின் எழில்மிகு தோற்றம்

கர்நாடக – தெலுங்கானா ஆகிய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் ஜீவாதாரமாக கருதப்படும் கிருஷ்ணா ஆற்றின் அருகே பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேய சுவாமி கோயில் கொண்டு அருள்கிறார். கோயிலின் நுழைவாயிலில் ராமர், சீதா, லட்சுமணர், அனுமர் ஆகியோரின் தத்ரூபமான சிலைகள் காணப்படுகின்றன.நுழைவாயிலை கடந்ததும், கோயிலின் உள்ளே ஓர் இனம் புரியாத பழமையின் வாசம். கோயிலை சுற்றிலும் தூண்கள். எப்போதும் வற்றாத மிக பெரிய கிணறு ஒன்றும் உள்ளது. மேலும், கோயில் சுற்றுப் புறத்தில் வேப்ப மரங்கள் காணப்படுகின்றன. வெயிலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும் கோயிலினுள் குளுமை நிறைந்துள்ளது.

பெயர்க் காரணம்

“பெத்த’’ என்றால், தெலுங்கில் பெரியது என்று பொருள். இங்குள்ள அனுமன் மிகப் பெரிய அனுமானாக தோற்றம் கொண்டதால், பெத்த என்ற பெயர் அனுமனுக்கு முன்பாக தொற்றிக் கொண்டது. அதே போல், “சிந்தரேவுல’’ என்பது, அனுமன் கோயில் கொண்டுள்ள இடத்தின் அருகில் இருக்கும் சிற்றூரின் பெயர். ஆக, இங்குள்ள அனுமனுக்கு பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேய சுவாமி என்று பெயர் உண்டாயிற்று.

கம்பீரமான பெத்த அனுமன்

பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேய சுவாமி கோயில், 18 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியின் தெற்குக் கரையில், பிரியதர்ஷினி ஜூராலா திட்டம் (PJP) அதாவது Lower Jurala Hydro Electric Project செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணா நதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேய சுவாமி கோயில். தலையில் கிரீடம், மிக பெரிய மீசை, காதில் பெரிய குண்டலம், கழுத்தில் சாளக்கிராம மாலை, இரண்டு பெரிய செங்கோலும், இரண்டு சிறிய செங்கோலும் என நான்கு செங்கோல்களை அருகிலேயே வைத்துக்கொண்டு மிக கம்பீரமாக அனுமன் காட்சியளிக்கிறார்.

உள்ளூர் மக்கள் வழிபடும் அனுமன்

மேலும் சிந்தரேவுலா, ரெவலப்பள்ளி, பீம்புரம், ரெகுலபள்ளே, கொத்தபள்ளே, பிஜ்வரம், ஆத்மகூர், ஆகிய பகுதியில் உள்ள பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மிக திருத்தலமாக இக்கோயில் பார்க்கப்படுகிறது. இந்தக் கோயிலின் குறித்த தெளிவான வரலாற்றுச் சான்றுகள் குறைவாக இருந்தாலும், உள்ளூர் மக்களின் தெளிவான வழிகாட்டுதலின் பெயரில், இக்கோயில், அந்தப் பகுதியில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் பக்தர்களின் முக்கியமான வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது.

திருவிழாக்கள்

அனுமன் ஜெயந்தி, ராமநவமி போன்ற விழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அன்றைய தினம் அனுமாருக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும், அலங்காரமும் நடைபெறும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

கோயில் அமைவிடம்: பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேய சுவாமி கோயில், கட்வால் அருகே, மஹபூப்நகர் மாவட்டம், தெலுங்கானா.கட்வால் நகரத்திலிருந்து நகர சாலைகள் வழியாக இந்த கோயிலை எளிதில் அடையலாம். கட்வால் இருந்து 14 கி.மீ தூரமும், மஹபூப்நகர் மாவட்டத்தில் இருந்து 80 கி.மீ தூரத்திலும் பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேய சுவாமி கோயிலை அடையலாம்.

 

 

The post பெருமை வாய்ந்த பெத்த சிந்தரேவுல ஆஞ்சநேயர் appeared first on Dinakaran.

Tags : Bedtha Cinderaola Anjaneyar ,Mahbubnagar district ,Telangana, Telangana State ,Bedtha Cinderawala Anjaneya Swami Temple ,Sri Vyasarajar ,Karnataka ,Telangana ,Beth Sindarewola Anjaneyar ,
× RELATED கிறிஸ்துமஸை வரவேற்போம்!