×

ஆந்திராவில் இருவேறு இடங்களில் ₹20 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்-கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் கைது

திருமலை : ஆந்திரவில் இருவேறு இடங்களில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் ₹20 லட்சம் மதிப்பு செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து தமிழகத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை மண்டலம் எஸ்ஆர் பாலம் ரோல்லமடுகு என்ற வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் அதிரடிப்படை டிஎஸ்பி செஞ்சுராஜூ தலைமையில் ஆர்ஐ சுரேஷ்குமார், விஷ்ணுவர்தன் குமார் தலைமையிலான குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் செம்மரங்களை சுமந்து செல்வதை பார்த்தனர். அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது ​​அதிரடிப்படை போலீசாரை பார்த்ததும் செம்மரக்கட்டைகளை கீழே போட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அந்த பகுதியில் 10 செம்மரக் கட்டைகள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், கோடூர் பிரிவை சேர்ந்த ஆர்.ஐ. கிருபானந்தா, ஆலிபாஷா குழுவினர் ராஜம்பேட்டை எல்லைக்குட்பட்ட தும்மலபைலு பகுதியில் ரோந்து சென்றனர். கலிகிரி வனப்பகுதியில் சிலர் செம்மரக் கட்டைகளை எடுத்து சென்ற நிலையில் அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர். அப்போது செம் ​மரக்கட்டைகளை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

இருப்பினுன் அதிரடிப்படை போலீசார் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வண்டக்கல் வளவு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன்(47) என தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் 10 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இந்த இருவேறு இடங்களில் ₹ 20 லட்சம் மதிப்பிலான 554 கிலோ எடை கொண்ட 20 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிரடிப்படை காவல்நிலையத்தில் இருவழக்குகளும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஆந்திராவில் இருவேறு இடங்களில் ₹20 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்-கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Kallakurichi ,Tirumala ,Special Task Force ,Dinakaran ,
× RELATED வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்...