சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக, பாஜஇடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு தரப்பில் இருந்து பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 இடமும், பாஜவுக்கு 5 இடமும், தேமுதிகவுக்கு 4 இடமுளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இந்தமுறை அதிமுக மற்றும் பாஜ உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
மேலும், தற்போது பாஜ தலைமையிலான கூட்டணியில் ஐஜேகே, புதியநீதிக்கட்சி, தமிழ்மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவையும் இணைக்க பாஜ திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதிமுகவோ எப்படியாவது பாமகவை கூட்டணிக்குள் இழுத்து கூட்டணி பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் அன்புமணி கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார், ஏனென்றால் ராமதாசுடன் அதிமுகவும், அன்புமணியுடன் பாஜவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் அதிமுக கூட்டணியிலே பாமக இடம் பெற ராமதாஸ் விரும்புகிறார். மேலும், ராமதாஸ் மற்றும் அதிமுக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 7 எம்பி சீட்டு மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக தெரிவித்துள்ளது. கூடுதலாக, தேர்தலுக்கு செலவும் செய்வதாக தெரிவித்துள்ளது. இதற்கு ராமதாசும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதே போல், மறுபக்கம் ஒன்றிய அமைச்சர் பதவிக்காக பாஜவுடன் கூட்டணி அமைக்க அன்புமணி விரும்புகிறார். பாஜவுடன் கூட்டணி சேர பாமகவுக்கு 10 எம்பி சீட்டு, ஒரு ராஜ்யசபா சீட்டு, ஒன்றிய அமைச்சர் பதவி, தேர்தல் செலவுக்கும் பணம் என அன்புமணி கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு பாஜவோ, 10 எம்பி சீட் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்க மாட்டோம், ஒன்றிய அமைச்சர் பதவி குறித்து தலைமையிடம் பேசி சொல்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது. அன்புமணியோ தேர்தலுக்கு செலவு செய்யாவிட்டாலும் பரவாயில்லை, எப்படியாவது ஒரே ஒரு ஒன்றிய அமைச்சர் பதவியாவது வழங்குமாறு தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லிக்கு சென்று பேசவும் தயாராக இருந்துள்ளார். ஆனால்,டெல்லிக்கு வரவிடாமல் அங்கேயே பேச்சு வார்த்தையை முடிவு செய்து விடுங்கள் என அமித்ஷா பாஜ தேர்தல் குழுவினருடன் தெரிவித்ததால், தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பகல் நேரங்களில் பேசாமல், இரவு நேரங்களில் மட்டுமே ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ராமதாசிடம், சீக்கிரம் முடிவை சொல்லுங்கள். நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், ராமதாசோ இதோ சொல்கிறேன், இதோ சொல்கிறேன் என இழுத்து வருகிறார். மறுபக்கம் அன்புமணியோ ஒன்றிய அமைச்சர் பதவிக்காக டெல்லியின் முடிவை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். பாஜவோ இதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அமைதி காத்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கூட பாஜ தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் வீட்டில் ரகசிய சந்திப்பு கூட்டம் நடத்தியுள்ளனர், இந்த சந்திப்பில் அன்புமணியும் உடன் இருந்துள்ளார். அப்போதும் கூட ஒன்றிய அமைச்சர் பதவி குறித்து கேட்டுள்ளார். ஆனால் பாஜ தலைவர்களோ, எங்களிடம் ஒன்றிய அமைச்சர் பதவி குறித்து தலைமை எதும் தெரிவிக்கவில்லை, நாங்கள் மேலிடத்தில் பேசிவிட்டு சொல்கிறோம் என கூறிவிட்டனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ராமதாஸ்,இதே போல் கூட்டணி முடிவை தள்ளிக் கொண்டே போனால் பொதுக்குழு அதிகாரத்துடன் அதிமுக கூட்டணியை தேர்ந்தெடுத்து விடுவேன், என அன்புமணியிடம் தெரிவித்துள்ளார். டெல்லி மேலிடமும் சரியாக பதில் அளிக்காததால் பாஜவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நிறுத்த அன்புமணி முடிவு செய்துள்ளதால்,அதிமுகவுடன் கூட்டணியை பாமக உறுதி செய்துள்ளது. அதே போல் தேமுதிகவுக்கு 4 எம்பி சீட், ஒரு ராஜ்யசபா சீட், தேர்தல் செலவுக்கு பணம் என தேமுதிகவுடன் கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ளது.
இது குறித்தான அதிகாரபூர்வ தகவல் அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜ ஒரு சில சிறிய கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி இன்று தைலாபுரம் தோட்டம் சென்று, பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார். அப்போது, அவரிடம் அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவிக்கிறார். இதை தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்
படுகிறது.
The post ஒன்றிய அமைச்சர் பதவிக்காக பாஜ உறவுக்கு விரும்பும் அன்புமணி பொதுக்குழு அளித்த அதிகாரத்துடன் அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் முடிவு appeared first on Dinakaran.