நன்றி குங்குமம் ஆன்மிகம்
சங்கப் புலவர்களால் `வானி’ நதியென்று போற்றப்பட்ட பவானி நதிக்கரையில் அமைந்துள்ளது, சத்தியமங்கலம் எனும் திருத்தலம். இது ஈரோடு மாவட்டத்தில், ஈரோட்டிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு திசையில் மைசூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற திருத்தலம். இந்த நகரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சேர, சோழ, பாண்டியர்கள், கொங்கு வேந்தர்கள், விஜய நகரப் பேரரசர்கள், நாயக்க மன்னர்கள், ஹொய் சாலர்கள், கடம்பர்கள், மைசூர் உடையார்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக சத்தியமங்கலம் விளங்கியது.
மேற்குறித்த ஆட்சியாளர்களின் காலத்திலிருந்தே இந்த நகரில் வரிசையாக பல ஆலயங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த நகரில் தெருவுக்குத் தெரு ஆலயங்கள் அமைந்திருப்பதால் இந்த நகரை ‘‘கோயில் நகரம்’’ என்றே சொல்லலாம். இருபது கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.அவற்றுள் நகரின் நடு நாயகமாக அமைந்திருக்கிறது. அருள்மிகு `அன்பிற்பிரியாள் அம்மன்’ திருக்கோயில். திருவிடைமருதூர் திருத்தலத்தைத் தலைமைப் பீடமாகக் கொண்டு அருள்புரியும், அன்னை அன்பிற்பிரியாள் இத்திருநகரிலும் வந்து கோயில் கொண்டிருக்கிறாள்.
திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அன்னையை, திருஞானசம்பந்தர் பெருமான் பலவாறு புகழ்ந்து போற்றியுள்ளார். தமது தேவாரப் பதிகத்தில் ‘திருவிடைமருதூர் பதிகத்தில்’;
‘‘வன்புற்றிள நாகம் அசைந்தழ காக
என்பிற்பல மாலையும் பூண்டு எருதேறி
அன்பிற் பிரியா தவளோடும் உடனாய
இன்புற் றிருந்தான் தன் இடை மருதீதோ’’
– எனப் பாடிப் பரவியுள்ளார்.
பற்பல காரணங்களால் பல அவதாரங்கள் எடுத்த அன்னை பராசக்தியின் ஒரு அவதாரமே அன்பிற்பிரியாள் அவதாரம். மதுரையம்பகுதியைச் சேர்ந்த மருதவாணன் தம்பதியருக்கு வெகுகாலம் குழந்தைப் பேறு வாய்க்காமல் இருந்தது. இதனால் வருந்தி, சிவ பார்வதியை வேண்டி கடுமையான விரதங்களையும், வழிபாடு களையும் மேற்கொண்டு வந்தனர். குழந்தை வரம் கோரிப் பிரார்த்தித்த காலத்தில், ‘அன்னை பார்வதி தேவி’யே அவர்களுக்கு மகளாய் அவதரித்தாள்.
அப்படிப் பிறந்த குழந்தைக்கு ‘அன்பிற் பிரியாள்’ என்று பெயரிட்டு அருமை பெருமையாய் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார்கள். கற்க வேண்டியவை அனைத்தும் கற்று மங்கைப்பருவம் எய்தினாள். சிவபெருமான் நினைவிலேயே வாழ்ந்த அவளை, இறைவன் தருமதா வளவன் என்னும் திருநாமம் கொண்டு வந்து முறையாகப் பெண் கேட்டு வந்து அன்பிற்பிரியாளைத் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் வைகாசி மாதம் ‘திருக்கல்யாண உற்சவமாக’ இவ்வாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஊரின் நடுமையத்தில் நவீன பாணியில் அமைக்கப்பட்டுள்ள இத்திருக்கோயில், நான்கு குடமுழுக்கு விழாக்களைச் சிறப்பாக நடத்தியுள்ளது. ராஜகோபுரம் இல்லை. அழகிய விமானத்துடன் கூடிய கருவறையில் அன்பிற்பிரியாள் அம்மன்.அபய வரத ஹஸ்தங்களோடு நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறாள். அர்த்த மண்டபத்தில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறையின் நுழைவு வாயிலின் முன், மகா மண்டபத்தில் இருபுறமும் பித்தளைத் தகடுகள் பதிக்கப்பட்டு, இருபுறமும் அழகே வடிவாக துவாரபாலகியர்கள் காட்சி தருகின்றனர். மண்டபத்தில் குருபகவானின் படமும், வடக்கு நோக்கி அய்யப்பன் மற்றும் திருமலை வேங்கடவனின் திருப்படங்களும் காட்சியளிக்கின்றன.
சிம்மவாகினியான அன்னை அன்பிற்பிரியாளுக்கு இங்கே நந்தியம் பெருமான் அழகிய சிறு வடிவில் கருவறையை நோக்கிய வண்ணம் காட்சி தருகிறார். பிரதோஷ காலங்களில் இவருக்கே அபிஷேக அலங்கார பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. கருவறையைச் சுற்றியுள்ள ஒரே பிராகாரத்தில், கன்னிமூலையில் கணபதியும், வடமேற்கு மூலையில் பால முருகனும் அழகிய விமானத்தில் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். பால முருகனுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் நவக்கிரக நாயகர்கள் எழில்மிகு மண்டபத்தின் கீழ் அருளாட்சிபுரிகிறார்கள்.
இவ்வாலயத்தில், சைவ ஆகமநெறி முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் ஆண்டு முழுவதும் வரும் எல்லாத் திருவிழாக்களும் உற்சவங்கள் முறையாக நடைபெற்றுவருகின்றன. வடக்குநோக்கி அருளும் துர்க்கைக்கு ராகு கால பூஜைகள். அய்யப்பனுக்கு சனிதோறும் அலங்காரபூஜைகள், பௌர்ணமியில் ஸ்ரீசத்ய நாராயண பூஜையும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரநாளில் காவடி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. விசேஷ காலங்களில் அன்பிற்பிரியாள் அம்மனுக்கு வெள்ளிக்கவசம், தங்கக் கவசம், முத்தங்கி சேவை அணிவிக்கப்பட்டு பூஜைகள் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த நகரில் பல கோயில்கள் இருந்தும் தங்கக் கவசத்தில் காட்சி தரும் அம்மன் இவள் மட்டுமே!
ஒவ்வொரு ஆண்டும் வரும் புரட்டாசி திங்களில் நடைபெறும் நவராத்திரி உற்சவம் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறுகிறது. நவராத்திரி உற்சவம். இத்திருக்கோயிலைச் சார்ந்த மகளிர் அணியினர் சிறப்பாக கொலுவைத்தும் பற்பல தெய்வ வடிவங்களை உருவாக்கியும் நவராத்திரி விழாவைப் பிரமாதப்படுத்துகிறார்கள்.
நவ கன்னியர், சப்தகன்னியர், முப்பெருந்தேவியர், மூம்மூர்த்திகள், ஐயப்பன், விநாயகர், திருமலை திருவேங்கடமுடையான் என்று வருடந்தோறும் கடவுள் வடிவங்களை உருவாக்கி கலை அழகுடன் மிளிரச் செய்கிறார்கள். மகா மண்டபத்தில் நாள்தோறும் அந்தப்பூ கோலம் போன்று பல வண்ணக் கோலங்கள் வரைந்து அழகு சேர்க்கிறார்கள். மூலவர் அன்பிற்பிரியாள் அம்மனுக்கு நாளொரு அலங்காரம் செய்து பூஜிக்கிறார்கள்.
நவராத்திரி நாட்களில் லலிதாஸகஸ்ர நாமாவளி, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற பக்திப்பாடல்கள், பஜனைகள் என்று இரவுப்பொழுது இனிமையாக்கப் படுகிறது. இவ்வாலயத்திற்குப் பின்புறம் கோயிலுக்குரிய பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. ஆலயம் சார்ந்த அனைத்து விழாக்களும், மற்ற திருமண நிகழ்ச்சிகளும் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. விழாக் காலங்களில் இத்திருமண மண்டபத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருக்கோயில், நகரின் நடுமையத்தில் உள்ளதால் அருகிலேயே பேருந்து வசதியுள்ளது. கோயில், காலை 6.00 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையில் நடை திறந்திருக்கும்.
தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்
The post ‘‘அன்பே தெய்வமென அருளும் அன்பிற் பிரியாள் அம்மன்’’ appeared first on Dinakaran.