×

அதிமுக ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 வாரம் சிறை

மதுரை: அதிமுக ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நெல்லை பழையபேட்டையைச் சேர்ந்த ஞானபிரகாசம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
‘‘பழையபேட்டையில் உள்ள ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 3.1.1966ல் தூய்மை பணியாளர் மற்றும் தோட்டக்காரராக பணியில் சேர்ந்தேன். 40 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி 30.6.2006ல் ஓய்வு பெற்றேன். அரசாணைப்படி எனக்குரிய பணப்பலன்களை கோரிய வழக்கில் 2019 அதிமுக ஆட்சியில் பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆனால், எனக்குரிய பணப்பலன்களை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், அப்போதைய பள்ளி கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய பள்ளி கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் (தற்போது நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமை செயலர்) உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றுவதற்காக அதிகளவில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிர்மனுதாரர்களான அப்போதைய பள்ளி கல்வித்துறை செயலர் (ஐஏஎஸ் அதிகாரி) பிரதீப் யாதவ், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி இயக்குநர் முத்துபழனிச்சாமி, பயிற்சி மைய முதல்வர் பூபால ஆண்டோ ஆகியோருக்கு 2 வார சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆக. 9ம் தேதிக்குள் பதிவாளர் (நீதித்துறை) முன் சரணடைய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

The post அதிமுக ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 வாரம் சிறை appeared first on Dinakaran.

Tags : IAS ,Madurai ,AIADMK ,Nellie ,Old Petty ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...