சென்னை: அதிமுக தலைவர்களையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து எதிர்த்து வரும் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று மேலிட தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவுக்கும், தமிழக பாஜகவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதில், கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் பாஜவுடன் சேர்ந்ததால்தான் தோல்வி அடைந்தோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். பின்னர் மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணியில் இருப்பதாக கூறி வந்தனர்.
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தாங்கள் தனித்துப் போட்டியிடுவதாகவும், கூட்டணி என்பது தேர்தலின்போதுதான் முடிவு செய்யப்படும் என்று அண்ணாமலை கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அடி விழுந்தது. இதனால் மீண்டும் கூட்டணியில் நீடிப்பதாக இரு கட்சியினரும் அறிவித்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரு கட்சியினருக்கும் இடையே மோதல் நீடித்தது. தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை விரும்பினார். ஆனால் எடப்பாடி சம்மதிக்கவில்லை. இருவரும் தனித்தனியாகவே பிரசாரம் செய்தனர். இந்தநிலையில், பாஜ தனித்துப் போட்டியிட்டால்தான் மாநில தலைவர் பதவியில் நீடிப்பேன். கூட்டணி வேண்டும் என்று முடிவு செய்தால், தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு, துணை தலைவராக தொடர்ந்து நீடிப்பேன் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
அதன்பின்னர் அதிமுக மாஜி அமைச்சர்கள் குறித்தும், அவர்களது ஊழல் குறித்தும் தொடர்ந்து கூறி வந்தார். இதனால் அண்ணாமலையை குறித்து புகார் செய்ய எடப்பாடி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். ஆனால் அந்த சந்திப்பின் முடிவில் அண்ணாமலையை மற்றொரு அறையில் இருந்து அழைத்து, ஒன்றாக நிற்க வைத்தார் அமித்ஷா. இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி, வேறு வழி இல்லாமல் போட்டோவுக்கு போஸ்கொடுத்து விட்டு வந்தார். ஆனால் அதன்பின்னர், ஜெயலலிதா ஊழல் முதல்வர். அவர் முதல்வராக இருந்த 1991-96ம் ஆண்டுதான் மோசமான ஆட்சி நடந்தது என்று கூறினார். இதனால் அதிமுக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.
மேலும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமும் போட்டனர். இதனால் கூட்டணியில் மோதல் நீடித்து வருகிறது. இந்தநிலையில், அமித்ஷா சென்னை வந்த போது உடல்நிலையை காரணம் காட்டி அவரை எடப்பாடி சந்திக்கவில்லை. பாஜக தலைவர்கள் அவருக்கு தகவல் சொல்லி அனுப்பினர். ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி அதை கண்டுகொள்ளவில்லை. இதை இரு நாட்களுக்கு முன்னர் அண்ணாமலையே ஒப்புக் கொண்டார். எடப்பாடியை சந்திக்க அமித்ஷா சென்னை வந்தபோது விரும்பினார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணியை பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி மேலிடத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். அதுவரை கூட்டணி குறித்த எந்த பேச்சும் கிடையாது என்றும் அவர் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை எம்பி தம்பித்துரை மூலம் மேலிட தலைவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதனால் தேர்தலுக்கு முன்னர் அண்ணாமலை மீது நடவிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்கிறார். இதனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
The post அதிமுக தலைவர்களையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து எதிர்க்கும் அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி பேச்சு: மேலிடத்துக்கு எடப்பாடி பழனிசாமி நிபந்தனை appeared first on Dinakaran.