×

அதிமுக ஆட்சியில் குட்கா ஊழல் மாஜி டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி: சிபிஐக்கு ஒன்றிய அரசு உத்தரவு

சென்னை: குட்கா ஊழல் புகார் விவகாரத்தில் முன்னாள் டி.ஜி.பி.க்கள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அனுமதி வழங்கி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் விரைவில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு விசாரணை ஆரம்பமாகும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஜெயம் இண்டஸ்டிரீஸின் இயக்குனர்கள் ஏ.வி.மாதவ் ராவ், உமா ஷங்கர் குப்தா மற்றும் ஸ்ரீனிவாஸ் ராவ் ஆகியோர் குட்காவை மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வந்தனர். தமிழகத்தில் தடை இருந்தாலும் தங்கு தடையின்றி குட்கா விற்பனை நடந்து வந்தது.

தமிழகத்தில் ரூ.250 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் குடோன், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் கடந்த 2017 ஜூலை 8ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, இந்த சோதனையின்போது அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரின் பெயர் முக்கிய இடம்பெற்றது. இந்த விவகாரத்தில், அப்போதைய காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரது பெயரும் அடிபட்டது. இதையடுத்து, குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி, தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்த அன்பழகன், உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

பின்னர் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில், குட்கா வியாபாரி மாதவ்ராவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, குட்கா ஊழல் வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதை தொடர்ந்து அவர்கள் மீது 2 குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர். டிஜிபிக்களாக இருந்த டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் ஐபிஎஸ் அதிகாரிகள் என்பதால், மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் அனுமதி தேவை. இதனால் மாநில அரசு மூலம் ஒன்றிய அரசின் அனுமதிக்கு அறிக்கையை சிபிஐ அனுப்பி வைத்தது. அதை பரிசீலித்த ஒன்றிய அரசு, இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.இதை தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் விரைவில் குற்றப்பத்தரிகையை சிபிஐ தாக்கல் செய்கிறது. இதுதான் கடைசி குற்றப்பத்திரிகை. இதனால், விரைவில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும். அப்போது நீதிமன்றத்துக்கு முன்னாள் அமைச்சர்கள், மாஜி டிஜிபிக்கள், அதிகாரிகள் தினமும் ஆஜராக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக ஆட்சியில் குட்கா ஊழல் மாஜி டிஜிபிக்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி: சிபிஐக்கு ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DGPs ,TK Rajendran ,George ,Union government ,CBI ,Chennai ,Dinakaran ,
× RELATED ஊராட்சிகள் எல்லை அளவீடு