சென்னை: லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இரண்டாவது நாளாக சாட்சியம் அளித்த நடிகர் விஷால், மொத்தம் 150க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். ‘விஷால் பிலிம் பேக்டரி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்த தொகையை விஷால் செலுத்தாததையடுத்து லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நடிகர் விஷாலிடம், லைகா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி இரண்டாவது நாளாக குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது, சினிமா துறையில் கடன்களுக்கு எவ்வளவு சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது? என்று வழக்கறிஞர் கேட்டதற்கு, மாதம் ஒரு சதவீதத்திலிருந்து ஆறு சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது என்று விஷால் பதிலளித்தார். லைகாவிற்கு எதிராக விஷால் தொடர்ந்த ஜி.எஸ்.டி. வழக்கு உள்ளிட்டவை தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. விஷாலிடம் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில், மொத்தம் 150க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றுக்கு சாட்சி கூண்டில் நின்றவாறு சுமார் இரண்டரை நேரம் விஷால் பதிலளித்துள்ளார். குறுக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, வழக்கறிஞர்கள் வாதத்துக்காக விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு நீதிபதிதள்ளிவைத்தார்.
The post நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 2வது நாளாக குறுக்கு விசாரணை: செப்.9ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.