×

அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் பதுக்கிய 2.4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

மீனம்பாக்கம்: அபுதாபியில் இருந்து சென்னை விமானநிலையத்துக்கு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான கழிவறையின் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த ₹1.50 கோடி மதிப்பிலான 2.4 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான கடத்தல் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இருந்து நேற்று காலை 8.20 மணியளவில் சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்துக்கு இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்து சேர்ந்தது.

பின்னர் இந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக, காலை 10 மணியளவில் ஐதராபாத்துக்குப் புறப்பட்டு செல்ல வேண்டும். இதையடுத்து, அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, அந்த விமானத்தில் இருந்த கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் பார்சல் ஒன்று இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து சென்னை விமானநிலைய மேலாளருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் விமானநிலைய வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் விமானத்துக்குள் ஏறி, மெட்டல் டிடெக்டர் மூலம் பார்சலை சோதனை செய்தனர். அதில், வெடி பொருட்கள் எதுவுமில்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பார்சலை வெளியே எடுத்து வந்து பிரித்து பார்த்தபோது, அதற்குள் சுமார் 1.50 கோடி மதிப்பிலான 2.4 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் விமான கழிவறையின் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த பார்சலை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அபுதாபியில் இருந்து சென்னைக்கு தங்கத்தை கடத்திவந்த ஆசாமி, விமான கழிவறையின் தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு, சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றொரு ஆசாமிக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, தகவல் கிடைத்த மற்றொரு கடத்தல் ஆசாமி ஐதராபாத் செல்லும் அதே விமானத்தில் உள்நாட்டு பயணியாக டிக்கெட் எடுத்து, ஐதராபாத்துக்கு செல்லும் வழியில் விமான கழிவறையின் தண்ணீர் தொட்டிக்குள் இருந்த தங்கக் கட்டி பார்சலுடன் வெளியே எடுத்து செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அபுதாபியில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த ஆசாமி மற்றும் இங்கிருந்து ஐதராபாத் செல்லவிருந்த மற்றொரு கடத்தல் ஆசாமி என இருவரையும் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் பதுக்கிய 2.4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Abu Dhabi ,Chennai ,Chennai Airport ,Dinakaran ,
× RELATED மலேசியா, அபுதாபியில் இருந்து...