×

தேங்காய் குடோனில் இருந்து அரங்கேற்றம்; 5 முகநூல் பக்கம்… 9 இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை வீழ்த்திய காமக் கொடூரன்: தூத்துக்குடியில் சிக்கினான்


அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க பெண், நேற்றுமுன்தினம் அண்ணாநகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கோபி என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. இதன்பிறகு தினமும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசிவந்த நிலையில் திடீரென்று என் மீது சந்தேகம் ஏற்பட்டு இரவு நேரங்களில் யாரிடமும் பேசக்கூடாது, என்னிடம் மட்டும்தான் பேசவேண்டும் என்றார். இதன்பிறகு ஆபாச வீடியோக்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பிவைத்து இதேபோல் எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் உனது மகளின் படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் மூலம் பரப்பிவிடுவேன் என்றார். இதனால் கோபியின் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டேன். இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பிளாக் செய்துவிட்டு புதிய செல்போன் நம்பரை வாங்கினேன்.

இதன்பிறகு கோபி, தனது அக்காவின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து அவரை மிரட்டி எனதுபுதிய செல்போன் நம்பரை பெற்று மீண்டும் என்னை தொடர்புகொண்டு நீ என்னிடம் பழகிவந்ததை என் கணவரிடம் தெரிவிப்பேன் என்று மிரட்டுகிறார். மீண்டும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே கோபியை கைது செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையில் தனிப்படை அமைத்து கோபியின் செல்போன் நம்பரை டவர் மூலம் கண்காணித்தபோது தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கோபியை கைது செய்தனர். இவர் சிறுவயதிலேயே வேலைக்கு சென்று விட்டார். தற்போது தேங்காய் குடோனில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இவ்வாறு தெரியவந்துள்ளது.

மேலும் கோபி, வெவ்வேறு பெயரில் ஐந்து முகநூல் பக்கங்களும் 9 இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்து நிறைய பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். கோபியிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.‘’இன்ஸ்டாகிராம் ஆர்வம் உள்ள பெண்களுக்கு பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மீண்டும் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்கள் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலைமை உருவாகி உள்ளது. இனிமேலாவது இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் பெண்கள் உஷாராக இருக்கவேண்டும்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post தேங்காய் குடோனில் இருந்து அரங்கேற்றம்; 5 முகநூல் பக்கம்… 9 இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை வீழ்த்திய காமக் கொடூரன்: தூத்துக்குடியில் சிக்கினான் appeared first on Dinakaran.

Tags : Coconut Kudon ,Facebook ,Kamak Kotoran ,Annanagar ,Chennai ,Annanagar Cyber Crime ,Police Station ,Kobe ,Kamak Kothuren ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...