×

பேசும் சித்திரம்

1. நடராசர் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து. அவை, இரத்தினசபை-திருவாலங்காடு, கனகசபை-சிதம்பரம், ரஜதசபை (வெள்ளி சபை)-மதுரை, தாமிரசபை- திருநெல்வேலி, சித்திரசபை-திருக்குற்றாலம். இறைவன் தன் ஆனந்தத் தாண்டவத்தின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்கள் புரிந்து உயிர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றான் என்று சித்தாந்த சாத்திரங்கள் கூறும்.

திருக்குற்றாலம் சித்திரசபை தவிர, மற்ற சபைகளில் நடராசரின் திருவுருவம் விக்கிரங்களால் ஆனது. ஆனால், குற்றாலத்தின் சித்திரசபையில் நடனமிடும் நடராசர் சித்திர வடிவத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இங்கு மறைத்தல் (திரோதானம்) தொழிற்குரிய திரிபுரதாண்டவம் நடைபெறுவதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது. எனவே, மறைத்தல் தொழிற்கேற்ப தம் நடனத்தை சித்திர வடிவில் மறைத்துக் கொண்டுள்ளார் என்றும் கூறலாம்.

திருக்குற்றாலச் சிற்சபை நடனத்தை ஆதிபராசக்திக்கு மட்டும் பெருமான் காட்டியிருந்தார். மற்றவர்கள் அதனைக் காண்பதற்குரிய பாக்கியத்தைப் பெறவில்லை. எனவே, அதனைக் காணும் பெருவிருப்பால் தேவர்களும், முனிவர்களும் பல காலம் தவம் புரிந்து, அந்தக் காட்சியை தம் கண்கள் குளிரக் கண்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பிரம்மன் பராசக்தி யந்திரத்தையும் சிவபிரான் யந்திரத்தையும் ஸ்தாபித்து, சித்திரங்களாக சுவரில் வரைந்து வைத்தான். அதன் காரணமாக வியாசர் முதலியோர், இறைவன் திருநடனம் புரியும் இச்சபைக்கு, ‘சித்திரசபை’ என்று பெயர் வைத்து அழைத்தனர்.

‘‘ஆதியாம் பரையலது நன்னகர்ச் சிற்பொது நடனம் ஆருங் காணார் காதலால் சுரமுனிவர் பலகாலம் தவம்புரிந்து கண்டவாற்றால் போதினான் முகன் மூலப் பரைபரமன் இயந்திரங்கள் பொறித்தான் என்றே வாதராயணன் முதலோர் சித்திர மன்று எனும் நாமம் வழங்கினாரால்.’’
(வாதராயணர்-வியாசர்)

இப்படி இந்தச் சித்திர சபையில் திருநடனத்தை வரைந்த பிரம்மன் தானும் ஓர் ஓவியம் போல் இங்கு நின்று நடன தரிசனம் காண்கின்றான்.
‘‘கடவுள் ஓவியப் பொதுவில் வேறு
ஓவியங் கடுப்ப’’
(கடவுள் ஓவியப் பொது – சித்திர சபை)

இச் செய்திகளை திரிகூடராசப்ப கவிராயர் இயற்றிய திருக்குற்றாலத் தல புராணத்தில் காணலாம்.மற்ற சபைகளில் காணப்படுவது போல் அல்லாமல் பெருமான் சித்திர உருவிலேயே அமைந்து ஆடும் காட்சி உலகிலேயே இங்கு மட்டும்தான் உள்ளது என்பது மிகவும் சிறப்புடையதாகும். அசையும் நடனத்தை அசையாத சித்திர வடிவில் நாம் காணும்படி காட்டுகிறான் பெருமான். கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பில் ‘பேசும் சித்திரம்’.

2.‘ஆத்மா அல்லது கடவுள் ஒரு பக்தனுக்கு அவசியம் நேரும் போது தானே குருவாகத் தோன்றி அவனது மனதை உள்முகமாகத் திருப்பி அவனுக்கு உள்ளே ஆத்மா அல்லது கடவுள் உறையும் மையத்திற்குச் செலுத்தி, மனதைத் தன்னிடம் இழுத்துக் கொண்டு ஆத்ம அனுபூதியை அளிக்கிறார்’ என்பது பகவான் இரமணரின் வாக்கு.

ஒரு குரு தமது ஆத்மீகக் குழந்தைகளான தம் பக்தர்களின் ஆத்மீக லௌகீக சம்பந்தமான நலன்களைக் காப்பதற்கு, தமது குரு தமக்கு எந்தவிதமான வழிகளைக் கையாண்டாரோ அவற்றையே தாமும் மேற்கொள்வது வழக்கம். பாபாவும் அம்முறைகளிலேயே தமது பக்தர்களுக்கு அருள்புரிந்தார். ‘எப்பொழுது எங்கே நீ என்னை நினைத்தாலும் நான் உன்னுடன் இருப்பேன்’ என்பது பாபாவின் உறுதிமொழி. பாபா சில நேரங்களில் நேரில் தோன்றியும், கடவுள் வடிவங்கள் வழியாகவும், மற்ற மகான்களின் வடிவாகக் காட்சி கொடுத்தும், சில குறிப்புகள் மூலம் தாம் அந்த இடத்தில் இருக்கும் அறிகுறிகளைக் காட்டியும் அருள்புரிகிறார்.

அவ்வகையில் அவருடைய எங்கும் நிறைந்த தன்மை பாபாவின் திருவுருவப் படங்களுக்கும் பொருந்தும் என்பதை இங்கு நாம் காணலாம். பம்பாயைச் சேர்ந்த பாலபுவா சுதார் ஒரு புகழ்பெற்ற மகான். அவரது இனிமையான பரவசம் மிக்க பஜனைகளால், ‘நவீன துகாராம்’ என்று தம்முடைய சிஷ்யர்களால் கொண்டாடப் பெற்றவர். அவர் 1917ஆம் ஆண்டு முதன்முதலில் சீரடிக்கு வந்து பாபாவை வணங்கினார். உடனே பாபா தன்னைச் சுற்றியிருந்த பக்தர்களிடம் ‘இந்த மனிதனை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்’ என்று சொன்னார். அது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று பாலபுவா வியந்தார். பின்னர் அதைப்பற்றி தீவிரமாக சிந்தித்த போது, சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாபாவின் படத்துக்கு முன்னால் தாம் வணங்கியது அவர் நினைவுக்கு வந்தது. இவ்வுண்மை பாபாவின் திருவுருவப் படத்தைப் பற்றி நமக்கு எத்தகைய நம்பிக்கையை அளிக்கிறது என்பதை உணரலாம்.

இன்றளவும் பாபா பக்தர்களால் புனித நூலாக, நித்திய பாராயணம் செய்யப்படுகின்ற ‘‘ சாயி சத்சரித”த்தை வழங்கியவர் அன்னா ஸாஹேப் தபோல்கர் என்கிற ஹேமத்பந்த். பாபா எப்போதும் அவரை ஹேமத்பந்த் என்றே கூப்பிடுவார். 1917ஆம் ஆண்டு பௌர்ணமி ஹோலிப் பண்டிகையன்று காலை அவருக்கு ஒரு கனவுக் காட்சி தோன்றியது. நன்றாக உடையணிந்த
சந்நியாசி ஒருவர் அவரை எழுப்பி, அன்று தாம் அவர் வீட்டுக்கு விருந்தாளியாக வரப்போவதாகக் கூறினார். கண்விழித்தபோது இந்தக் கனவுக் காட்சி மிகவும் தெளிவாக ருந்ததையும்,பாபாவின் ஒவ்வொரு வார்த்தையும் தமக்கு நினைவிருப்பதையும் உணர்ந்தார்.பாபாவுடன் அவர் மிக நெருங்கிய தொடர்புடையவராக இருப்பினும்,பாபாவையே எப்போதும் தியானித்த போதிலும் பாபா உணவுக்காகத் தம் வீட்டுக்கு வருவார் என்று அவர் எதிர்பாக்கவில்லை.

ஏனெனில், பாபா ஒருவர் வீட்டுக்கும் உணவு கொள்ளச் செல்ல மாட்டார் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்த போதிலும், அந்தக் கனவிற்கு அழுத்தமான சக்தி இருப்பதாக நினைத்தார். அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு தன் மனைவியிடம், ‘பாபா இன்று நம் வீட்டிற்கு விருந்துண்ண வருவார்’ என்று கூறினார். அதற்கு அவள், ‘சீரடியிலிருந்து பாபா இவ்வளவு தூரமுள்ள பாந்த்ராவிற்கு எப்படி வருவார்?’ என்று ஐயத்துடன் கேட்டாள்.

‘பாபா நேரடியாக வரமாட்டார் என்றும், ஒரு விருந்தினர் ரூபத்தில் வருவார் என்றும், இன்னும் அதிகமாக உணவு தயாரிப்பது சிரமம் இல்லை என்றும் ஹேமத்பந்த் கூறினார். இதனால் சமாதானமடைந்த ஹேமத்பந்தின் மனைவி சிறந்த பதார்த்தங்களை அதிக அளவில் தயார் செய்து வைத்தார்.ஹோலி பூஜையெல்லாம் முடிந்த பிறகு குடும்பத்தினர் அனைவரும் விருந்துக்கு தயார் ஆயினர்.

நடுஸ்தானம் விருந்தாளிக்கென ஒதுக்கப்பட்டு குடும்பத்தினர் இருவரிசைகளில் அமர்ந்தனர். இலை போடப்பட்டது. எப்படி பாபா விருந்துக்கு வரப் போகிறாரோ என்று ஆவலுடனும் கவலையுடனும் ஹேமத்பந்த் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார். எவரும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. உணவுநேரம் சிறிது கடந்து, பரிமாறப்பட்ட உணவு வகைகளை, உண்ண ஆரம்பிக்கும் போது வாசலில் காலடிச் சத்தம் தெளிவாகக் கேட்டது.

அங்கே அலிமுகம்மது,மௌலானா இஸ்மு முஜாவர் ஆகிய இரு முஸ்லீம் நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், தாங்கள் உணவு வேளையில் வந்து இடையூறு செய்வதற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டு, ஹேமத்பந்திடம், ‘உங்களுக்காகக் கொண்டு வந்த இந்தப் பொருளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னால் நாம் ஓய்வாகச் சந்திக்கும் பொழுது அதைப் பற்றிய அதிசயமான கதையைக் கூறுகிறோம்’ என்றனர்.

வந்தவர்கள் சென்றவுடன் ஹேமத்பந்த் பழைய செய்தித்தாள் ஒன்றினால் சுற்றப்பட்டிருந்த அதனைப் பிரித்துப் பார்த்தார். அது பாபாவின் ஓர் அழகிய படம் (Bas- Relief). தமது வார்த்தைகளின்படி உணவு கொள்ளும் சரியான நேரத்தில் பாபா விருந்தாளியாக வந்து விட்டார். ஹேமத்பந்தின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்களில் நீர் வழிய மிகவும் மனமுருகி தனது தலையைத் தாழ்த்திப் படத்திலுள்ள பாபாவின் பாதங்களில் வைத்துக் கொண்டார். இத்தகைய ஆச்சரிய லீலையால் தம்மை ஆசீர்வதித்திருப்பதாக நினைத்தார். விருந்தாளிக்கெனப் போடப்பட்டிருந்த நடுநாயகமான இருக்கையில் பாபாவின் படத்தை எழுந்தருள செய்து, முறையாக பூஜித்து, நைவேத்தியம் செய்தார். பின் குடும்பத்தினர் அனைவரும் உணவருந்தினர். இவையெல்லாம் எங்ஙனம் நிகழ்ந்தன என்பது குறித்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

ஹேமத்பந்திடம் பாபாவின் படத்தைக் கொடுத்த அலிமுகம்மது வீட்டில் ஏராளமான சாதுக்களின் படங்கள் இருந்தன. ஒருமுறை அவருக்குக் காலில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள பம்பாய் சென்று அங்கு ஓய்வில் இருந்தார். அப்போது அவருடைய உறவினர் நூர் முகம்மது மதக் கோட்பாடுகளுக்கு விரோதமாக வீட்டில் சாதுக்களின் படங்களை வைத்திருப்பதாலேயே அவருக்கு இந்தக் கஷ்டம் வந்தது என்று அவருடைய குரு கூறினார் என்று சொன்னார்.

இதைக் கேட்ட அலிமுகம்மது தம் வீட்டிலுள்ள படங்களையும் எடுத்து கடலில் போடுமாறு தன்னுடைய மேனேஜருக்குத் தகவல் கொடுத்தார். அவருடைய மேனேஜர் எல்லாப் படங்களையும் எடுத்துக் கடலில் போட்டுவிட்டு வந்தார். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பின் அலிமுகம்மது தன் வீட்டிற்கு வந்தபோது பாபா படம் மட்டும் அலமாரியில் இருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தார். அந்தப் படத்தை ஹேமத்பந்திடம் கொடுப்பதே சிறந்தது என்று முடிவு செய்து ஹோலிப் பண்டிகையன்று அவரிடம் ஒப்படைத்தார். அந்தப் படத்தின் ரூபத்தில் தான் ஹேமத்பந்தின் வீட்டிற்கு பாபா விருந்தாளியாக வந்தார். பாபா தம் வரவைக் குறித்து ஹேமத்பந்துக்கு முன்னரே அறிவித்து விட்டு ‘தானும் படமும் வேறல்ல’ என்பதை எடுத்துக் காட்டினார்.

ஹேமத்பந்திடம் தான் வீட்டுக்கு வருவதாகக் கூறியதும், அலிமுகம்மது வீட்டில் பாபா படம் மட்டும் எஞ்சி இருந்ததும் நமக்கு ஆச்சரியம் தான். எந்த மதத்தோடும் தம்மை ஒன்று படுத்திக் கொள்ளாத அல்லது எல்லா மதங்களையும் சேர்ந்தவராகத் தம்மை எண்ணி வந்த பாபா, பக்தர்கள் அவரவர்கள் வழக்கப்படியே தம்மை வழிபடுவதற்கு அனுமதியளித்தார் என்பது இங்கு நினைந்து மகிழத்தக்கது.

தோபேஸ்வரைச் சேர்ந்த மகான் காக்கா மஹராஜ் பூனாவிற்குச் சென்றிருந்த போது, பாபாவின் பக்தரான ராவ்பகதூர் ஹரிவிநாயக் ஸாதே அவரைத் தரிசிக்கச் சென்றார். அப்போது ஸாதே, மஹராஜிடம் தன் வீட்டிற்கு வந்து ஆசீர்வதிக்குமாறு கேட்டார். மஹராஜ் உடனடியாக மறுத்துவிட்டார். பின்னர் நெடுநேரம் கழித்து ஸாதேவிடம் ‘நான் தங்கள் வீட்டிற்கு வருகிறேன்’ என்று சொன்னார். உடனே, ஸாதே மஹராஜை தம் வீட்டிற்கு வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

மஹராஜ் ஸாதேவின் வீட்டிற்கு வந்த போது, அங்கிருந்த பாபா படத்தைச் சுட்டிக் காட்டி, ‘நான் உன் வீட்டிற்கு வந்து உன்னைப் பார்க்கும் வரை, அவர் என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை’ என்று கூறினார்.இங்ஙனம் ‘பேசும் சித்திரமான’ பாபாவின் திருவுருவப்படமும் பாபாவும் ஒன்று என்ற உண்மை அவரது நெருங்கிய திடமான பக்தர்களுக்கு உறுதியாக விளங்கும். இங்கு காட்டிய நிகழ்ச்சிகள் தவிர இன்னும் நிறைய நிகழ்ச்சிகளைக் கூறலாம். எதைச் சொல்வது? எதை விடுவது? சாயி சரணம்.

(தொடரும்)

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

 

The post பேசும் சித்திரம் appeared first on Dinakaran.

Tags : Natrasar ,Ratnasabai ,Thiruvalangadu ,Kanagasabai ,Chidambaram ,Rajadasabai ,Sabai ,Madurai ,Thamirasabai ,Tirunelveli ,Chitrasabai ,Thirukuttalam ,Dinakaran ,
× RELATED திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில்...