×

ஆம்புலன்ஸ் இல்லாததால் சி.ஆர்.பி.எப் வீரர் பலி: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

பள்ளிப்பட்டு: மேல்சிகிச்சைக்கு  செல்ல சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் சி.ஆர்.பி.எப். வீரர் பலியானதாக கூறி, அரசு மருத்துவமனையை உறவினர்கள் உட்பட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நெடியம் பழைய  காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (32 ). இவர், பீகார் மாநிலத்தில் மத்திய  பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த  அண்ணாதுரைக்கு  திருமண  நாளான நேற்று முன் தினம் மாலை பள்ளிப்பட்டில் பொருட்கள் வாங்கி கொண்டு பைக்கில்   வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது, நகரி சாலையில்  முன்னால் சென்ற மாட்டு வண்டியின் மீது  கட்டுப்பாடு இழந்து பைக் வேகமாக மோதியதில் அண்ணாதுரை படுகாயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்ட தலைநகரமான பள்ளிப்பட்டு அரசு  பொது மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்சுக்கு தகவல் தரப்பட்டது.  திருத்தணியிலிருந்து  108 ஆம்புலன்ஸ் வர  காலதாமதமானதால், உரிய நேரத்தில்  அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்ததாக கிராமமக்கள் 300க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில்  அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில்   போதிய மருத்துவர்கள், அவசர சிகிச்சை பிரிவு, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில் பெயரளவில் மட்டுமே அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால்  உயிரிழக்கும்  சூழல் நிலவுகிறது.

பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மருத்துவமனையில் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்ததால்,  சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டம்  கைவிடப்பட்டது.  கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க ஏதுவாக ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்  வருவதில் ஏற்பட்ட கால தாமதத்தால் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags : soldier ,CRPF ,protest ,government hospital ,
× RELATED கிரேன் மோதி மாஜி ராணுவ வீரர் பலி