×

அடையாள அட்டை உள்ளவர்களுக்கு பென்ஷன் கேட்டு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

நாகர்கோவில், டிச.3: நாகர்கோவிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 89 பேரை போலீசார் கைது செய்தனர். சமூகத்தில் அடித்தட்டு நிலையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் வறுமையிலும், வேலைவாய்ப்பு இன்மையாலும் வாழ வழியின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எந்தவித நிவாரணமும் இன்றி இவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகளில் அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் பென்சன் வழங்க வேண்டும். புதுச்சேரி, தெலங்கானா மாநிலம் போன்று மாதாந்திர உதவித் தொகையை ₹3000 ஆக உயர்த்திட வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு ₹5 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கிட வேண்டும். தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பில் 4 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு என உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்க மாவட்ட தலைவர் சார்லஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உசைன், பேராசிரியர் மனோகர் ஜஸ்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் மறியல் போராட்டத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து  மறியலில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள் 89 பேரை போலீசார் கைது செய்தனர்.கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் காரணமாக அவ்வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டதுடன் வாகன போக்குவரத்து சிறிது நேரம் மாற்றிவிடப்பட்டது.

Tags : ID card holders ,
× RELATED அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி...