×

சென்னை விமான நிலையத்தில் செருப்பில் மறைத்து கடத்தி வந்த 240 கிராம் தங்கக்கட்டி சிக்கியது: ரூ.6.5 லட்சம் கரன்சி பறிமுதல்

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னைக்கு வந்த மீட்பு விமானத்தில், பயணியின் செருப்பில் மறைத்து கடத்தி வந்த 240 கிராம் தங்கத்தையும், துபாய் செல்ல இருந்த விமானத்தில் கைப்பையில் மறைத்து கடத்தமுயன்ற ரூ.6.5 லட்சம் வெளிநாட்டு கரன்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து நேற்று காலை சிறப்பு மீட்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹசன் அலி (23) என்ற பயணி, தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார்.

ஆனால், அவர் அணிந்திருந்த செருப்பு வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து அவரை உள்ளே அழைத்து, செருப்புகளை ஆய்வு செய்தபோது, அதன் நடுவில் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் எடை 240 கிராம். அதன் மதிப்பு ரூ.12 லட்சம். அதை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இதனிடையே, சென்னையில் இருந்து நேற்று துபாய் செல்ல இருந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் (21) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய சோதனையில், கைப்பையில் சவுதி ரியால், அமெரிக்க டாலர் கரன்சிகளை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.6.5 லட்சம். அதை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : airport ,Chennai ,
× RELATED துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்