×

கொல்லிமலைக்கு மாறுதலில் சென்ற சம்பளம் பெற முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர் தவிப்பு

நாமக்கல், டிச.2: மாறுதலில் சென்ற பள்ளிக்கு பணிப்பதிவேடு, சம்பள பட்டியலை அனுப்ப தலைமை ஆசிரியர் மறுப்பதால், சம்பளம் பெற முடியவில்லை என, கொல்லிமலைக்கு மாறுதலில் சென்ற ஆசிரியர் சிஇஓவிடம் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த கோட்டப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன். இவருக்கும், அப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தனபால்(28) என்பவருக்குமிடையே, கடந்த 3 ஆண்டாக பணிப்போர் நிலவி வந்தது.  ஆசிரியர் தகுதி காண் பருவம் பெறுவதற்கான பரிந்துரையை, தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் செய்து கொடுக்கவில்லை. இதனால், மன உளைச்சல் அடைந்த ஆசிரியர் தனபால், இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து சிஇஓ அய்யண்ணன்னின் பரிந்துரைப்படி, தனபாலை நிர்வாக மாறுதல் மூலம், கொல்லிமலையில் உள்ள அரசு மாதிரி பள்ளிக்கு, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் இடமாறுதல் செய்து உத்தரவிட்டார். மேலும், அந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியை, கோட்டபாளையத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
கொல்லிமலை மாதிரி பள்ளியில் ஆசிரியர் தனபால் பணியில் சேர்ந்து 2 மாதமாகியும், அவரது பணிப்பதிவேடு(எஸ்ஆர்), சம்பள பட்டியல் ஆகியவற்றையும் கோட்டப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், கொல்லிமலை மாதிரி பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்ப மறுத்து வருகிறார். இதனால், ஆசிரியர் தனபால் கடந்த 2 மாதமாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கிறார். இதுகுறித்து மீண்டும் முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணனிடம், ஆசிரியர் தனபால் புகார் அளித்துள்ளார். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. ஆனால், மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையே நடக்கும் மோதல், கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.




Tags : Government school teacher ,
× RELATED அரசு பள்ளி ஆசிரியர் பணி நிறைவு விழா