×

மூக்கையூர் துறைமுகத்தில் சிதறி கிடக்கும் சங்கு,கழிவுகளால் துர்நாற்றம்

சாயல்குடி, நவ.26:  மூக்கையூர் மீன்பிடி துறைமும் பராமரிப்பன்றி கடல் கழிவுகளால் சுகாதாரமற்று இருப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக கிராமக்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி அருகே மூக்கையூரில் மிக ஆளமான கடற்கரை உள்ளது. இங்கு ரூ.170.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கடற்கரையிலிருந்து, கடல் மட்டத்தோடு சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு பாறை கற்களை போட்டு பாதை அமைக்கப்பட்டு, படகுகள் நிறுத்தும் தளம், வலை பின்னுதல், உலர்த்துதல், மீன் ஏலக்கூடம், ஓய்வறை, உலர்களம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை மற்றும் துறைமுகத்தை பார்த்து ரசிப்பதற்கு கடலாடி, கமுதி, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதி மற்றும் வெளிமாவட்ட, மாநிலங்களிலிருந்து சுற்றுலாபயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் பண்டிகை மற்றும் விடுமுறை தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கனமழை, புயல் எச்சரிக்கை இருப்பதால் கடந்த ஒருவாரமாக பொதுமக்கள் வர அனுமதிக்கவில்லை. கனமழை, புயலால் துறைமுகம் படகு அணையும் தளத்தில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 80 நாட்டு படகுகள், 10க்கும் மேற்பட்ட விசை படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் துறைமுகத்தில் இருந்து வலைபின்னுதல், வலை சீரமைத்தல், படகு பழுது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் துறைமுகத்தில் கடற்கரையில் அலைகளால் ஒதுங்கிய கடல்புல், கடலில் மீன்பிடிக்க பயன்படுத்திய வலையில் சிக்கிய சங்கு உள்ளிட்ட பொருட்களை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளனர். சிதறி கிடக்கும் கடல் சங்கு, கடல்புல் உள்ளிட்ட கடல்கரை கழிவுகளால் கடற்கரை மற்றும் துறைமுகத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் துறைமுகம் பகுதியில் சுகாதாரக்கேடு நிலவி, தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மூக்கையூர் கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே துறைமுகம் பகுதியில் சிதறி கிடக்கும் சங்கு உள்ளிட்ட கடல் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க...