×

நிவர் புயல் சேதம் முழுமையான கணக்கெடுப்புக்கு பிறகு நிவாரணம் வழங்கப்படும் கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கடலூர், நவ. 27: தமிழகத்தில் நிவர் புயலால் பாதிப்பு குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்திய பிறகு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.  ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:இந்திய வானிலை ஆய்வு மையம் கடலூர் மாவட்டம் புயலால் பாதிக்கப்படும் என கூறியதையடுத்து நான் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து வழங்கிய ஆலோசனையை அடுத்து நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. தமிழகத்தில் நிவர் புயலுக்கு 2,999 முகாம்களில் 13 லட்சம் பேர் வரை தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 441 முகாம்களில் 52 ஆயிரத்து 226 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 77 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது. அதனை சீர் செய்யும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் 321 மரங்கள் விழுந்துள்ளது. 1613 ஹெக்டர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, 315 ஹெக்டர் மணிலா, 35 ஹெக்டர் வாழை, 8 ஹெக்டர் மர வள்ளி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வந்துள்ளது. இன்னும் முழுமையாக கணக்கெடுக்க சொல்லியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும். பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் கம்பங்கள் உடைந்துள்ளதால் முழுமையாக ஆய்வு செய்து சீர் செய்யப்பட்டு படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும்.

Tags : Edappadi Palanisamy ,Cuddalore ,
× RELATED இந்தியாவிலேயே உயர்க்கல்வியில்...